புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த முறை போல் பேரவைத் தலைவர் பதவியை பெற அமித் ஷாவிடம் வலியுறுத்துவோம் என பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு கடந்த மே மாதம் 4ம் தேதி வெளியானது. தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க மீண்டும் பெரும்பான்மை கிடைத்தது. ஆட்சியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அங்கம் வகிக்கின்றன. முதல்வர், 3 அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்தவர்கள். மீதமுள்ள இரு அமைச்சர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள்.
புதுவை அமைச்சரவையில் முதல்வர், 5 பேர் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியும். இந்த 6 பேரும் பதவியேற்ற நிலையிலும் யாருக்கும் இலாகா ஒதுக்கப்படவில்லை. அனைத்து துறைகளையும் முதல்வர் ரங்கசாமி மட்டுமே கவனித்து வந்தார்.
முதல்வர் ரங்கசாமி ஆளுநரிடம் அளித்த பட்டியலில் பாஜகவுக்கு கடந்த ஆட்சியில் தரப்பட்ட முக்கிய இலாகா தராததால் பிரச்சினை ஏற்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகைக்கு முன்னதாக திருத்தப்பட்ட பட்டியலை முதல்வர், ஆளுநரிடம் தந்ததால் அமைச்சர்கள் இலாகா பட்டியல் அரசிதழில் கடந்த புதன்கிழமை வெளியானது. முதல்வர், அமைச்சர்கள் பொறுப்பேற்க தொடங்கி 85 நாட்களுக்கு பிறகு கடும் போராட்டம் நடத்தி பாஜக முக்கிய துறைகளை தனது அமைச்சர்களுக்கு பெற்றது.
அடுத்த இழுபறி தொடக்கம்:
தேர்தல் முடிவு வெளியாகி 90 நாட்கள் கடந்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு சட்டப்பேரவைத் தலைவர், பேரவை துணைத்தலைவர் தேர்தல் நடத்தவில்லை. அதிமுக எம்எல்ஏ அன்பழகன் சட்டப்பேரவை தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டு எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சபாநாயகர் பதவியை அன்பழகன் கோரி வருகிறார். பாஜகவும் இப்பதவியை கோருகிறது. இந்நிலையில் புதுச்சேரிக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்துள்ளார். தனியார் ஹோட்டலில் அவரை சந்திக்க வந்த புதுவை மாநில பாரதிய ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், "புதுவை வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் கட்சியின் வளர்ச்சி மற்றும் மாநில வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்த உள்ளார்.
புதுச்சேரியில் தற்போது தற்காலிக சபாநாயகர் தான் உள்ளார். கடந்த முறை போல் கூட்டணியில் இப்போதும் பாஜகவுக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் என அமித்ஷாவிடம் வலியுறுத்த உள்ளோம்" என்றார்.