சென்னை: பழனிசாமியின் தலைமையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்தஇக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: எம்ஜிஆர் அதிமுகவை தொண்டர்களுக்காக உருவாக்கி அமோக வெற்றிபெற்று 3 முறை முதல்வராக பதவி வகித்தார். அதன்பிறகு கட்சிப்பொறுப்பை ஏற்ற ஜெயலலிதாவும் 30 ஆண்டுகளாக அதிமுகவை கட்டுக்கோப்பாக வழிநடத்தி யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக தொடர்ந்து முதல்வராக பதவி வகித்தார்.
ஆனால் அதன்பிறகு தொண்டர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி உருவாக்கப்பட்டது. ஆனால் திடீரென தனக்கென ஒரு ஆதரவுக் கூட்டத்தை உருவாக்கி, பழனிசாமி தலைமையில் ஒற்றைத் தலைமை இருந்தால்தான் வெற்றி பெறமுடியும் எனக் குரல் எழுப்பி, போலியான பொதுக் குழுவைக்கூட்டி அதிமுகவை படுபாதாளத்துக்கு பழனிசாமி தள்ளிவிட்டார்.
அவருடைய கட்டுப்பாட்டில் கட்சி சென்ற பிறகு கடந்த எம்.பி. தேர்தலில் 7 இடங்களில் அதாவது 48 சட்டப்பேரவை தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தது. 14 எம்.பி. தொகுதிகளில் மூன்றாடம் இடத்துக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. பழனிசாமி வெற்றி பெறுவார் என மாயையை உருவாக்கி விட்டனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும். தற்போது தொண்டர்கள் எங்கு செல்வது என தெரியாமல் திக்குமுக்காடிப் போய் உள்ளனர். இங்கு பேசிய ராமச்சந்திரன், வைத்திலிங்கம் போன்றோர் பழனிசாமி அங்கம் வகிக்கும் கூட்டணி வேண்டாம் என்றும், பழனிசாமியின் தலைமையை ஏற்க மாட்டோம் என்றும் எரிமலையாக வெடித்துவிட்டு தங்களது உள்ளக் குமுறலை உணர்ச்சி பெருக்குடன் தெரிவித்து சென்றுள்ளனர். அவர்களின் உணர்வுகளை அப்படியே நானும் வழிமொழிகிறேன். பழனிசாமிக்கு பாடம் புகட்டுவோம். மக்கள் நம் மீது மிகுந்த அக்கறையும், நம்பிக்கையும் வைத்துள்ளனர். இவ்வாறு பேசினார்.
முன்னதாக, குன்னம் ராமச்சந்திரன்பேசும்போது 3 சீட்டுக்காக இபிஎஸ் அணியில் இடம்பெறத் தேவையில்லை என்றும் வைத்திலிங்கம் பேசும்போது, அதிமுவை குரங்கு கையில் கிடைத்த பூ மாலையாக மாற்றிவிட்டார் பழனிசாமி என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.