தென்காசி: “தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்,” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமிக்கு வாக்கு சேகரித்து புளியங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து சிந்தாமணி பேருந்து நிலையம் வரை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சாலை வலம் சென்றார்.
பின்னர் அவர் பேசியதாவது: திமுக தமிழக மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. குற்றங்கள் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீதான குற்றங்கள், தலித் மக்கள் மீது நடக்கும் வன்முறைகள் அதிகரித்துள்ளது. இது திமுக அரசு தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்தான் பொறுப்பு.
திமுக தமிழ்நாட்டை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. திமுக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ஊழல் செய்கின்றனர். சென்னை உயர் நீதிமன்றம் இங்கு ஒரு அமைச்சரையும், அவரது மகனையும் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று சொல்லியுள்ளது. இன்னொரு அமைச்சரின் பெயர் சட்டவிரோத மணல் கொள்ளையில் அடிபடுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சட்டவிரோத மணல் கொள்ளையால் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்துள்ளனர். தமிழ்நாட்டின் வளங்களை நேரடியாக கொள்ளையடிக்கின்றனர்.
திமுக எம்எல்ஏ ஒருவரின் மருத்துவமனையில் சிறுநீரக திருட்டு குறித்த பெரிய குற்றச்சாட்டில் விசாரணை நடக்கிறது. திமுக அரசு ஏழை மக்களின் உயிரோடு விளையாடுகிறது. இந்த திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து ஏராளமானோர் இறந்தனர். இது திமுக அரசின் முழு அலட்சியத்தால் நடந்தது. சட்டவிரோதமாக சாராயம் வெளிப்படையாக விற்பனையாகிறது. இந்த அலட்சியத்துக்கும், குழப்பத்துக்கும் எதிராக குரல் கொடுத்து, மக்கள் நலனை முன்னிருத்தும் அரசை கொண்டுவர வேண்டிய நேரம் இது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த பிரச்சினையை வேரோடு அழிக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் சாராய மாபியாக்களை ஒழிப்போம். திமுக எப்போதும் நமது நம்பிக்கைகளை கேலி செய்துகொண்டே உள்ளது.
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசினார். கொசு, டெங்கு, மலேரியா, கரோனா போன்றவை எப்படி ஒழிக்கப்பட வேண்டுமோ அதேபோல் சனாதன தர்மமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.
தமிழ்நாட்டில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள் பூஜை செய்யும் உரிமைகளையும் பறிக்கிறார்கள். திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தீபம் ஏற்றச் சென்ற பக்தர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். உயர் நீதிமன்றம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்க வேண்டும் என்று சொல்லியது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்.
நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டுவரும் மசோதாவை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தடுத்து நிறுத்தின. தமிழ்நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது.
மாநிலத்தில் கடன் தொகை 10.27 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் கடன் மட்டும் உயர்ந்துள்ளது. ஆனால் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி தரவில்லை என்று பொய் செல்கின்றனர். கடந்த 11 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு வழங்கியது. ஆனால் அந்த பணம் திமுகவினரிடம் சென்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணம் திருப்பி எடுக்கப்படும். அது மக்களின் பணம்.
‘DMK’ என்பதன் ‘டி’ எழுத்து துஷ்பிரயோகம், ‘எம்’ என்ற எழுத்து முறைகேடு, ‘கே’ என்பது குற்றம் என்பதை குறிக்கிறது. NDA என்பதன் ‘என்’ என்ற எழுத்து நியாயம், ‘டி’ என்ற எழுத்து டெவலப்மென்ட், ‘ஏ’ என்பது அமைதியை குறிக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், வளர்ச்சியை விரும்புகின்றனர். நாளை நமதே என்றார்.