மதுரை: அமமுகவில் தகுதியானவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கும் கூட்டணிக்கு செல்வோம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறினார்.
மதுரை தெற்கு, கிழக்கு தொகுதிகளுக்கான அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதுரை காமராசர் சாலையிலுள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்றார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல் ரீதியாக எது நடந்தாலும் அமமுகவையும், என்னையும் தொடர்புபடுத்தி பேசுகின்றனர். தொலைக்காட்சி டிபேட்டிலும் விவாதிக்கின்றனர். செங்கோட்டையன் ஒரு சீனியர். அவராக ஒரு முடிவெடுத்து தவெகவுக்கு சென்றுள்ளார். ஓபிஎஸ் தலைமையில் அவரது கட்சியில் ஒரு முடிவெடுக்கின்றனர். எங்களுக்கு அதில் தொடர்பில்லை.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பவர்கள் ஏதோ பின்னணியில் இருந்து கொண்டு பேசுகின்றனர். நடுநிலையாக இருக்கும் நெறியாளர் ஒருவர், ஓபிஎஸ் முடிவை அறிவித்த நிலையில், டிடிவி ஏன் இன்னும் அறிவிக்கவில்லை என கேட்கிறார். அது அவசியமில்லையே. நாங்கள் எப்போது முடிவெடுப்போம் என்பதை நாங்களே முடிவு செய்வோம்.
நாங்கள் விரும்பும் கூட்டணிக்கு செல்ல முடியுமே தவிர, எங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என, எதிர்பார்த்து போக முடியாது. எங்களது கட்சியின் தகுதியான வேட்பாளர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கும் கூட்டணிக்கு செல்வோம். திமுக கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு குறித்து அறிவித்து விட்டார்களா. எங்களுக்கான தொகுதிகளை உறுதி செய்துவிட்டு கூட்டணிக்கு போவோம்.
10 ஆண்டாக கூட்டணியில் இருக்கும் விசிக, கம்யூனிஸ்டு, மதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என முடிவாகி அவர்களே அறிவிக்காத பட்சத்தில் எங்களை எப்படி எதிர்பார்க்கிறீர்கள். எங்களை மதித்து கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளும், கூட்டணியை உருவாக்கும் கட்சிகளும் எங்களை அழைப்பது உண்மை. தேர்தலுக்கு முன்பாகவே எங்களது நிலைபாடு அறிவிக்கப்படும்.
நண்பர் அண்ணாமலை தொடர்ந்து என்னிடம் பேசுகிறார். நேரில் பேசும்போதும், என்டிஏவுக்கு வரவேண்டும் என வலியுறுத்துகிறார். ஓபிஎஸ் முடிவெடுப்பது அவரது கட்சி முடிவு. அடுத்த நாளே நானும் முடிவெடுக்க வேண்டும் என்பது தவறு. எங்களது கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள், வாக்கு வங்கிகளும் ஏற்கும் கூட்டணிக்கு செல்வோம்.
எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை. கொடுத்தும் கூட்டணிக்கு வரவழைக்க முடியாது. மரியாதை நிமித்தமாக சந்தித்தாலும் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்பது முட்டாள்தனமானது. ‘ டிபேட் ’ என்ற பெயரில் உங்கள் விருப்பங்களை எங்கள் மீது திணிக்க முடியாது. அமித்ஷாவின் அறிவுரையின்படி முடிவெடுக்கப்படும் என்பதெல்லாம் தவறு. எங்கள் மீது சேற்றைவாரி இறைந்தாலும் முடிவெக்க முடியாது.
நான் பெங்களூர் வழியாக டெல்லிக்கு சென்று பாஜக தலைவர்களை சந்தித்தேன் என்பதெல்லாம் பொய். எவன் தாலி அறுத்தால் என்ன கவலை என்றே டிவி விவாதம் நடத்துகின்றனர். எங்களை கூட்டணிக்கு அழைப்பவர்களை நிராகரிக்கவுமில்லை. ஏற்கவுமில்லை. எங்களின் எதிர்காலத்தை வைத்தே முடிவு செய்வோம்.
தேர்தல் என்ற 3 மாத கூத்துக்காக முடிவு எடுக்க முடியாது. இதற்கு பிறகும் அரசியலில் இருக்கவேண்டும். எங்களது இலக்கு நோக்கி பயணிக்கிறோம். அடையும் வரையிலும் ஓயமாட்டோம். நான் தேர்தலில் போட்டியிடுவதா வேண்டமா என இன்னும் முடிவெடுக்கவில்லை.
ஆண்டிப்பட்டியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போடுவதற்கு நிர்வாகிகள் அழைத்ததால் சென்றேன். திமுக 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இம்முறை திமுகவுக்கு எதிராகவே மக்கள் வாக்களிப்பர். கடவுள், மதம், சாதியின் பெயரால் யாரும் மக்களின் பொது அமைதிக்கு எதிராக செயல் பட்டால் அதில் நீதிமன்றமும், அரசுகளும் கவனமாக இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.