கேரள எம்.பி ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி: சாதியவாதம், மதவாதத்துக்கு எதிராக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தொடர்ந்து நாடு முழுவதும் போராடும் என்று கேரள எம்.பி ராதாகிருஷ்ணன் பேசினார்.
புதுச்சேரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5-வது மாநில மாநாடு இன்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அகில இந்திய துணைத் தலைவர் கே. சாமுவேல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து பேசுகையில், "நவீன காலகட்டத்தில் வாழ்ந்து வருகின்றோம். இந்த நூற்றாண்டிலும் சாதிய கொடுமைகள் தொடர்வது வருத்தம் அளிக்கிறது.
உயர்ந்த படிப்புகளை படித்துள்ள ஐஐடி போன்ற ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள் பிற்போக்குத்தனமான கருத்துகளை மாணவர்களிடம் கூறி வருகின்றனர். இந்திய சமூகம் எதை நோக்கி போகிறது என்று ஐயம் நம்மைப் போன்றவர்கள் மத்தியில் எழுகிறது. ஆட்சி அதிகாரத்துக்காக தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்ற நிலை உள்ளது. எனவே இந்துத்துவா அமைப்பின் சதியை முறியடிக்க நாம் அனைத்து பகுதி மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி அகில இந்திய தலைவரும், கேரள எம்.பியுமான ராதாகிருஷ்ணன், மாநாட்டை நிறைவு செய்து பேசுகையில், “1957-ஆம் ஆண்டு கேரளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இஎம்எஸ் அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்திட்டங்களை அமல்படுத்தியது. நில உச்சவரம்பு சட்டம் அமலாக்கியது. ஏழை விவசாயிகளுக்கான நிலத்தை அந்த அரசு உறுதி செய்தது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வியை உறுதி செய்தது. ஏராளமான சமூகநல திட்டங்களை இஎம்எஸ் அரசு செய்து காட்டியது.
கேரளம் இன்றைக்கும் வளர்ச்சி நோக்கி செல்கிறது என்றால் மார்க்சிஸ்ட்கள் சாதியவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து மிகப் பெரிய இயக்கங்களை நடத்தி வந்துள்ளனர். எனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி அத்தகைய போராட்டங்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும்” என்றார். முன்னதாக, சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதிகளுக்கு நினைவு பரிசு தரப்பட்டது.