உதயநிதி ஸ்டாலின்

 
தமிழகம்

“ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை எதிரொலிப்போம்” - உதயநிதி ஸ்டாலின்

வேட்டையன்

சென்னை: ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்கள் எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்கள் தலைவர் சொல்லியது போல், எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய தமிழக அரசுக்கு தனது வாழ்த்தினை உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது: “தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு என் வாழ்த்துகள். இந்த நேரத்தில், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்கும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கருணாநிதியின் உடன்பிறப்புகள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நன்றி.

கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக மக்களின் குரலை நாங்கள் எதிரொலிப்போம். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்கள் தலைவர் சொல்லியது போல், எதிரிக்கட்சியாக இல்லாமல், ஒரு நல்ல எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமாக நாங்கள் தான் இனி இருப்போம். என் மீது நம்பிக்கை வைத்து மக்கள் கொடுத்திருக்கும் இந்தப் பொறுப்புக்கு நான் நூறு சதவீதம் உண்மையாக இருப்பேன். கடுமையாக உழைப்பேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT