தமிழகம்

‘வன்னியர்களுக்கு 5 சீட் வேண்டும்’ - போர்க்கொடி தூக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள்

செய்திப்பிரிவு

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளது சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரில் இருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி இல்லத்தில் அவரது மகனும் கடலூர் எம்.பியுமான விஷ்ணு பிரசாத் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

          

இக்கூட்டத்தில் காங்கிரஸில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, வரும் சட்டமன்றத் தேர்தலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இது குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வன்னியர் சமூக மக்கள் பரவலாக வசிக்கின்றனர். ஆனால், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் இந்தச் சமூகத்திற்கு ஒரே ஒரு சீட் மட்டுமே வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் விருத்தாசலம் தொகுதியில் எம்.ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை சமூக நீதி அடிப்படையில், குறைந்தது 5 தொகுதிகளையாவது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஒதுக்க வேண்டும் என கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை வைத்தோம்.

அவரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் மொபைலில் பேசினார். அதற்கு கிரிஷ், 'எங்களது கோரிக்கை பரிசீலப்பதாக தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி-க்கள் விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

ஏற்கெனவே செல்வப்பெருந்தகை தொகுதிகளை வாங்க கூடாது. கிரிஷ்தான் திமுகவுடன் பேசி இறுதி செய்ய வேண்டும் என சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில்தான் அடுத்த சர்ச்சை வெடித்திருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT