‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை
சென்னை: “தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் - ஒழுங்கு?” என்று தவெக அரசுக்கு ‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், “மனு அளிக்க வந்த கார்த்திக் குமார் என்ற சாமானி நபர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
சட்டப்பேரவை துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரவி சங்கரும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல் துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்துக்குரியவை.
தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் - ஒழுங்கு?
அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல் துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல.
எனவே, பாதிக்கப்பட்ட நபருக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.