டிடிவி.தினகரன் | கோப்புப்படம்

 
தமிழகம்

“பங்காளிச் சண்டையை மறந்துவிட்டு கைகோத்திருக்கிறோம்” - டிடிவி தினகரன் வாக்குமூலம்

செய்திப்பிரிவு

“விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை என்ற சான்றோர் வாக்கிற்கு அமைய பங்காளிச் சண்டைகளையும், மனஸ்தாபங்களையும் ஓரம் தள்ளிவிட்டுப் பொதுநலனுக்காகக் கைகோத்தி ருக்கிறோம்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நேரில் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது:

          

மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் என்டிஏ கூட்டணியைப் பலப்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் உன்னத முயற்சிக்கு வலுசேர்க்கவே இந்த முடிவு.

’விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' என்ற சான்றோர் வாக்கிற்கு அமைய பங்காளிச் சண்டைகளையும், மனஸ்தாபங்களையும் ஓரம் தள்ளிவிட்டுப் பொதுநலனுக்காகக் கைகோத்திருக்கிறோம். கடந்த 2021-லேயே அமித் ஷா எடுத்த முயற்சி சில காரணங்களால் தடைபட்டது. அதன் விளைவாக, இன்று தமிழகம் 'திராவிட மாடல்' என்ற பெயரில், மக்களை வாட்டி வதைக்கும் 'திராவக மாடல்' மற்றும் 'கஞ்சா மாடல்' ஆட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்தத் தீய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் தமிழகத்தில் மலரச் செய்யவும் அமமுக முழு முனைப்புடன் செயல்படும். அமமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் என்டிஏ கூட்டணியின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் அயராது உழைப்பார்கள். எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எல்லாம் மறந்துவிட்டு, தமிழகத்தின் நலனையும், அமமுக நலனையும் மட்டுமே கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். 2021-ல் நழுவிய ஜெயலலிதாவின் ஆட்சியை, இந்த முறை உறுதியாக மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT