பாமக முன்னாள் ஏம்எல்ஏ அருள் | கோப்பு படம்

 
தமிழகம்

“ராமதாஸால் பல கோடி ரூபாய் இழந்தோம்” - சேலம் அருள் வேதனை

வெற்றி மயிலோன்

சேலம்: “ராமதாஸை நம்பி நாங்கள் பயணித்தோம், பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். எங்களுக்கு மாணவர் பருவத்தில் இருந்து ராமதாஸை மட்டும் தான் தெரியும். அவர் எங்களை நட்டாற்றில் விட்டு போய்விட்டாரோ என்ற பயமும், வேதனையும் உள்ளது” என பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் தெரிவித்தார்.

2024-ம் ஆண்டு டிசம்பரில் நடந்த பாமக பொதுக்குழுவில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே வெளிப்படையான மோதல் வெடித்தது. இதன்பின்னர் இருவருக்கும் இடையிலான மோதல்போக்கு அதிகரித்து, இருவரும் எதிரெதிர் முகாம்களில் இருந்தவர்களை நீக்கிக்கொண்டனர்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக அணியில் இடம்பெற்று 4 தொகுதிகளில் வென்றது. சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட ராமதாஸ் தரப்பு தேர்தலில் எந்த தாக்கத்தையும் உருவாக்கவில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவிய நிலையில், சமீபத்தில் இருவரும் மீண்டும் சந்தித்தனர். ராமதாஸ் - அன்புமணி இடையே இணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், ராமதாஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என தெரியாமல் கலக்கத்தில் உள்ளனர்.

இந்தச் சூழலில், முன்னாள் எம்எல்ஏ அருள் தலைமையில் சேலத்தில் ராமதாஸ் அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அருள், “ராமதாஸ் - அன்புமணி சந்தித்ததை மனமார வரவேற்கிறோம். ராமதாஸை நம்பி நாங்கள் பயணித்தோம், பல கோடி ரூபாயை இழந்திருக்கிறோம். சரியான வழிகாட்டுதல் இல்லையே என்ற ஏக்கத்தில் பொறுப்பாளர்கள் என்னிடம் வந்து என்ன செய்யலாம் என கேட்கிறார்கள். நீங்களே கருத்துகளை சொல்லுங்கள் என கேட்டிருக்கிறோம்.

எல்லா மாவட்டங்களில் இருந்தும் செயலாளர்கள் வருகின்றனர். அவர்களிடம் கருத்து கேட்கிறோம். சென்னையில் ஒரு நாள் அனைவரும் ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்போம்.

ஒன்றரை ஆண்டுக்கு முன்பே ராமதாஸ் - அன்புமணி சந்தித்திருந்தால், பாமக கட்சி அங்கீகாரம் பெற்றிருக்கும். துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும். 10 - 15 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றிருப்போம். பாமகவின் 5.8 சதவீத வாக்குகள் என்பது 2 சதவீதமாக குறைந்திருக்காது. என்னைப் போன்றவர்கள் இருக்கும் சொத்தையெல்லாம் விற்று, பல கோடி ரூபாய் கடன்காரர்களாக மாறியிருக்க மாட்டார்கள். இந்த வேதனை, வருத்தம், வலி எங்களுக்கு உள்ளது.

எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இரு நாட்களில் அறிவிப்போம். எங்களுக்கு மாணவர் பருவத்தில் இருந்து ராமதாஸை மட்டும் தான் தெரியும். அவர் எங்களை நட்டாற்றில் விட்டு போய்விட்டாரோ என்ற பயமும், வேதனையும் உள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT