சென்னை: “இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரனை அதிமுக - பாஜக கூட்டணியில் இணைத்துக்கொள்வது குறித்தும் பேசவில்லை” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், “எங்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன்ராம் மேக்வால் ஆகியோர் கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்திய பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தற்போதைய தமிழக கள நிலவரம், அரசியல் சூழல் குறித்து பேசினோம்.
இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து பேசவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரனை அதிமுக - பாஜக கூட்டணியில் இணைத்துக் கொள்வது குறித்தும் இன்று பேசவில்லை. தமிழகத்தில் ஆட்சியிலிருந்து திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். எனவே ஒத்தக் கருத்துடைய அனைவரும் ஒன்று சேரவேண்டும் என நான் தொடக்கத்திலிருந்தே சொல்லி வருகிறேன்” என்றார்.
எடப்பாடி பழனிசாமியை தினகரன் கடுமையாக எதிர்க்கும் சூழலில் அவர் கூட்டணிக்கு வருவாரா என்பது குறித்த கேள்விக்கு, “ஒரு காலத்தில் இந்திரா காந்தி மதுரை வந்தபோது திமுகவினர் கல்லால் அடித்து கருப்புக் கொடி காட்டினார்கள். அதன் பின்னர் ஆறே மாதத்தில் திமுகவும், காங்கிரஸும் கூட்டணி வைத்தது. எனவே அரசியலில் நிரந்தர எதிரியும், நிரந்தர நண்பரும் இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ விஜய் யாருடைய ஓட்டை பிரிப்பார் என்பது தேர்தல் முடிவில்தான் தெரியும். தேமுதிக, பாமக போன்ற கட்சிகள் நல்ல முடிவை எடுப்பார்கள் என நம்புகிறேன். இப்போது ஆளாளுக்கு ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கிறார்கள், அது எல்லாம் சரியாக வராது. விஜய் குறித்து இன்றைய ஆலோசனை கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை” எனத் தெரிவித்தார்.