பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கேசவன்
மதுரை: “தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிரான வெறுப்பு அலை வீசி வருகிறது” என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் கேசவன் கூறினார்.
மதுரையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சி.ஆர்.கேசவன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் 2026 தேர்தலை தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என திசை திருப்பி வருகிறார். இந்த தேர்தலில் மையப்புள்ளியாக இருப்பது திமுகவின் மெகா ஊழல் ஆட்சி தொடர வேண்டுமா அல்லது ஊழலற்ற நல்லாட்சி வர வேண்டுமா என்பது தான். திமுகவின் 5 ஆண்டுகால ஆட்சி இருண்ட ஆட்சி. இதுபோன்ற ஆட்சியை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை.
திமுக கொடிய நச்சு கலந்த கிருமி. இந்த கிருமி 5 ஆண்டுகளாக தமிழக மக்களை தன் பிடியில் சிக்க வைத்து சின்னாபின்னமாக்கி வைத்துள்ளது. இந்த கிருமியை ஒழிப்பதற்கான செயல்திறன் மிக்க நம்பகத்தன்மை கொண்ட தடுப்பூசியாக அதிமுக, பாஜக கொண்ட தேஜ கூட்டணியை மக்கள் கருதுகின்றனர். கரோனாவை தடுப்பூசியை பயன்படுத்தி ஒழித்தது போல் தேஜ கூட்டணி என்ற தடுப்பூசியை கொண்டு திமுக என்ற கிருமியை மக்கள் ஒழிப்பது உறுதி.
மக்களிடம் திமுகவுக்கு எதிராக பெரியளவில் வெறுப்பு அலை வீசுகிறது. பிரச்சாரத்துக்கு செல்லும் அமைச்சர்களை மக்கள் விரட்டியடிக்கின்றனர். திமுகவுக்கு இன்னொரு முறை வாக்களித்தால் திருடனை அழைத்து கையில் வீட்டுச்சாவியை அழிப்பது போல் என மக்கள் நினைக்கின்றனர். இதனால் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள்.
மத்திய அரசு நிதி தரவில்லை என ஸ்டாலின் எப்போதும் பேசுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.1.50 லட்சம் கோடி நிதி தான் வழங்கப்பட்டது. பாஜக ஆட்சியில் மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.5.20 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி எங்கே போனது எனத் தெரியவில்லை. மத்திய அரசு நிதி கொடுத்தும் ரூ.10.70 லட்சம் கோடி கடன் வாங்கி மக்கள் மத்தியில் கடன் சுமையை ஏற்றி வைத்துள்ளனர்.
பிரதமர் மோடி 2047-ல் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் உறுதியாக உள்ளார். அப்போது தமிழ்நாடும் வளர்ச்சியடைந்த மாநிலமாக வர வேண்டும். அதற்கு தமிழகத்தில் தாமரை மலர வேண்டும்.
மதுரை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம.சீனிவாசனுக்கு அதிக ஆதரவு உள்ளது. தமிழகம் முழுக்க தெரிந்தவர். அவரால் மதுரை தெற்கு தொகுதி கவனம் பெற்றுள்ளது. தொகுதிக்கு தனியான செயல் திட்டம் வைத்துள்ளார். 24 மணி நேரமும் தொகுதி மக்களுடன் இருந்து தேவைகளை பூர்த்தி செய்யத் தயாராக உள்ளார் தற்போதைய எம்எல்ஏ தலைமறைவாக இருக்கிறார். அவரை கூகுளில் தேடினால் கூட கிடைப்பதில்லை என இளைஞர்கள் சொல்கின்றனர். அவர் ஸ்டாலின், உதயநிதி, வைகோ, துரை வைகோவுக்கு தான் பம்பரமாய் வேலை செய்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.