கோப்புப் படம்

 
தமிழகம்

சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கமின்றி சீரான போக்குவரத்து: தமிழக அரசு

9 மழைக்கால நிவாரண மையங்கள் திறப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டு, சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 6 இடங்களில் அதி கனமழையும் (20 செ.மீ.க்கு மேல்), 12 இடங்களில் மிக கனமழையும் (11.5 செ.மீ.க்கு மேல்) பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பாரிமுனையில் 36.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் இரவு முழுவதும் கள ஆய்வுகளை மேற்கொண்டு, மழைநீர் அகற்றும் பணிகள் மற்றும் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்தனர். பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 15,000 களப்பணியாளர்கள் இரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், மழைநீரை வெளியேற்றுவதற்காக 650 மின் மோட்டார் பம்புகள் மற்றும் டிராக்டர்களில் பொருத்தப்பட்ட பம்புகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

வெள்ள பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 4 குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

தற்போது, அனைத்து முக்கிய பேருந்து வழித்தடச் சாலைகளிலும், மழைநீர் தேங்கிய பெரும்பாலான தெருக்களிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. தாழ்வான ஒரு சில பகுதிகளில் மட்டும் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடையும்.

மழைநீர் தேங்கியிருந்த அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு, காலை 6 மணிக்குள் அனைத்து சுரங்கப்பாதைகளும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 9 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மழை காரணமாக உயிரிழப்புகளோ, பெரிய அளவிலான விபத்துகளோ ஏற்படவில்லை. நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளது. கடுமையான வானிலை நிலவரம் மற்றும் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 30 செ.மீ.க்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகியிருந்தபோதிலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் ஒருங்கிணைந்த தீவிர நடவடிக்கைகளால், காலை நேரத்திற்குள் மாநகரில் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT