ஜி.கே.வாசன்

 
தமிழகம்

கடைமடைவரை காவிரி நீர் செல்வதை அரசு உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழினி

சென்னை: தமிழக முதல்வர் விஜய், மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைத்திருப்பது விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கடைமடைவரை தண்ணீர் செல்வதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று தமிழக முதல்வர் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையைத் திறந்து வைத்திருப்பது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கத்திலிருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருப்பில் இல்லாமல், தண்ணீர் திறக்கப்படாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. இப்போது சம்பா சாகுபடிக்கு ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது கடைமடைவரை செல்வதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். டெல்டா பாசனத்திற்கும் மற்றும் மக்களின் குடிநீருக்கும் மேட்டூர் அணையின் நீரானது பெரும் பயன் தரும்.

தமிழ்நாட்டின் குடிநீருக்கும், காவிரி டெல்டா பாசனத்திற்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று செப்டம்பர் 1 – மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துள்ள தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. குறிப்பாக திறக்கப்பட்டுள்ள தண்ணீரானது காவிரி பாசன மாவட்டப்பகுதி முழுவதும் சென்றடைந்து சம்பா சாகுபடி முழுமையாக நடைபெற வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் அடைய வேண்டும்.

மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பயிர்க்கடன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு விவசாயிகளுக்கு துணை நிற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மிக முக்கியமாக விவசாயிகளுக்கு இடுபொருள் உதவி, இயந்திர நடவு ஊக்கத்தொகை, உர மானியம் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சம்பா சிறப்பு தொகுப்பு திட்டத்தையும் தமிழக அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

தமிழக முதல்வர் மேட்டூர் அணையை திறந்திருப்பதன் மூலம் காவிரி பாசனப்பகுதிகளில், டெல்டா மாவட்டப்பகுதிகளில் விவசாயம் முழுமையாக நடைபெற்று, விவசாயம் மேம்பட்டு, விவசாயிகள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பது தான் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) இயக்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT