சிறுவாணி அணை |  கோப்புப் படம் 

 
தமிழகம்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

தொடரும் வடகிழக்கு பருவமழை

டி.ஜி.ரகுபதி

கோவை: தொடர் மழையின் காரணமாக, சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 38.87 அடியாக நீர்மட்டம் உள்ளது.

கோவையின் முக்கிய நீராதாரங்களாக சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் உள்ளன. 49.53 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட சிறுவாணி அணையில் கடந்த தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எதிர்ப்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து சிறுவாணி அணை மற்றும் அடிவார நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகள் மற்றும் அதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இன்று கூறியது: ‘சிறுவாணி அணையில் கடந்த 17-ம் தேதி 16 மி.மீ, 19-ம் தேதி 95 மி.மீ, 22-ம் தேதி 20 மி.மீ, 23-ம் தேதி 47 மி.மீ, 24-ம் தேதி 22 மி.மீ, நேற்று (25-ம் தேதி) 48 மி.மீ, இன்றைய (அக்.26) நிலவரப்படி 95 மி.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது.

அடிவாரப் பகுதியிலும் 54 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவத்தில் அணையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று பெய்த கனமழையின் காரணமாக சிறுவாணி அணையில் இன்று ஒரே நாளில் 4.07 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்து, காலை 38.87 அடியாக உயர்ந்துள்ளது.

இன்று அணையில் இருந்து 56.80 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது. அதேபோல், 100 அடி நீர்த்தேக்க அளவு கொண்ட பில்லூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 91.50 அடிக்கு நீர்மட்டம் உள்ளது.

அணையில் இருந்து மின் உற்பத்திக்காக 6 ஆயிரம் கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் இன்றும் நீரோட்டத்தின் வேகம் அதிகளவில் இருந்தது’ என்று அவர்கள் கூறினர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT