தமிழகம்

தொடர் மழை காரணமாக பிளவக்கல் அணையின் நீர்மட்டம் 35 அடி ஆக உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

அ.கோபால கிருஷ்ணன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பிளவக்கல் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் ஶ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகம் கூமாபட்டி மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 18 வருவாய் கிராமங்களை சேர்ந்த 40 கண்மாய்கள் நிரம்பி 8 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த சில மாதங்களாக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து 17 அடியாக சரிந்தது. ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் பெய்த சாரல் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 20 அடியை தாண்டியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கியதை அடுத்து மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தினசரி கனமழை பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டு, 47 அடி உயரமுள்ள பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம், திங்கள் கிழமை 25 அடியை கடந்தது.

கடந்த இரு நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததால் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து 35 அடியாக உள்ளதால் விவசாயிகள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT