தமிழகம்

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கன அடியாக உயர்வு

செய்திப்பிரிவு

தருமபுரி/மேட்டூர்: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 8,000 கன அடியாக அதிகரித்தது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 13-ம் தேதி காலை 6 மணி அளவீட்டின்போது விநாடிக்கு 9,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, அன்று காலை 11 மணியளவில் 6,500 கனஅடியாகவும், 14-ம் தேதி காலை 6,000 கனஅடியாகவும் குறைந்தது.

நேற்று முன்தினம் காலை 6 மணி நிலவரத்திலும் 6,000 கனஅடியாக நீடித்த நீர்வரத்து, அன்று காலை 11 மணியளவில் 4,500 கனஅடியாகக் குறைந்தது.

இந்நிலையில், கர்நாடகாவிலுள்ள அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று பிற்பகலில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் நீர்நிலைகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளதால் குடிநீருக்கான தேவை அதிகரித்துள்ளது.

இதையடுத்து காவிரி கரையோர மாவட்டங்கள் மற்றும் குடிநீர் நீரேற்று நிலையங்கள் மூலம் பிற மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்படும் நீரின் அளவு, நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 1,500 கனஅடியில் இருந்து 2,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4,385 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 6,179 கனஅடியாக அதிகரித்தது. நீர்திறப்பை விட நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் 80.93 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 81.31 அடியாகவும், நீர் இருப்பு 42.88 டி.எம்.சி.யில் இருந்து 43.27 டி.எம்.சி.யாகவும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT