மதுரை: திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி-யை 11 வகுப்பு வரை மட்டுமே படித்தவர், வெளியூர்க்காரர் என்று விமர்சனம் செய்வதும், பதிலுக்கு சுந்தர் சி-யும், அவரது மனைவி குஷ்புவும், பழனிவேல் தியாகராஜனின் தலைக்கனம்தான் அவரது அரசியல் வாழ்க்கை வீழ்ச்சிக்கு காரணம் என்றும் தனிமனித தாக்குதல்களை தொடங்கி இருப்பது, மதுரை மத்திய தொகுதி தேர்தல் களத்தை சூடாக்கி வருகிறது.
கடந்த 2016-ம் தேர்தலில் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக சார்பில் பேராசிரியர் ஜெயபாலும், சென்ற முறை அதிமுக கூட்டணியில் பசும்பொன் தேசிய கழகம் சார்பில் ஜோதி முத்துராமலிங்கமும் போட்டியிட்டார்கள். இந்த இரு தேர்தல்களிலும் மதுரை மாவட்ட தேர்தல் களத்தில் மத்திய தொகுதி பெரிய கவனம் பெறவில்லை. பழனிவேல் தியாகராஜனும் எதிர்பார்த்ததுபோல் வெற்றிப்பெற்றார். அதற்காக அவர் தேர்தல் களத்தில் மிக சிரமப்பட வேண்டிய அவசியமும் இல்லாமல் இருந்தது.
ஆனால், இந்த முறை, பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் களம் இறக்கப்பட்டதும், இந்த தொகுதி மாநில அளவில் கவனம் பெற ஆரம்பித்தது. சுந்தர்.சியின் பிரச்சாரமும், மதுரை மத்திய தொகுதியை பற்றிய அவரது கேள்விகளும் பேசும் பொருளானது. மீனாட்சியம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய அவர் செய்தியாளர்களிடம், ‘‘10 ஆண்டுகளாக எம்எல்ஏ, அமைச்சராக இருந்தும் பழனிவேல் தியாகராஜன் மதுரைக்கு எதுவும் செய்யவில்லை. அவரது தொகுதிக்குட்பட்ட மீனாட்சியம்மன் கோயிலை பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது” என்று குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கருத்து கேட்டபோது, “யாரோ வெளியே இருந்து வந்து வரலாறு, தகவல் தெரியாமல் பேசினால் அவரது அறியாமைக்கு நான் எதற்கு பதில் சொல்ல வேண்டும்” என்று கடந்து சென்றார். அதற்கு குஷ்பு, “வெளியூரில் இருந்து ஏன் வருகிறீர்கள் என்று கேட்கிறார், நாங்கள் லூட்டி அடிக்க வரவில்லை. சுந்தர்.சி சொந்தமாக உழைத்து சம்பாதித்து வந்தவர். மக்களுக்கு சேவை செய்ய வந்தவரை வெளியூர்காரர் என்று எப்படி சொல்லலாம். அவரது அந்த தலைக்கனம்தான் அவரது அரசியல் வாழ்க்கை வீழ்ச்சிக்கு காரணம்,’’ என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சாரத்தில் பழனிவேல் தியாகராஜன், ‘‘மதுரைக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற இலக்கோடுதான் நான் அரசியலுக்கு வந்தேன். விரும்பிய அளவிற்கு என்னால் செய்ய முடியவில்லை என்றாலும் முடிந்தளவுக்கு நல்ல திட்டங்களை தொகுதி மக்களுக்கு செய்துள்ளேன்” என்றார்.
அதற்கு சுந்தர் சி, ‘‘பழனிவேல் தியாகராஜன் ஆளும் கட்சியில் அமைச்சராக இருந்தும் மதுரை மத்திய தொகுதிக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியாமல் அவரை தடுப்பது யார்?. கேள்வி கேட்ட என்னை வெளியூர்காரர் என்கிறார். நான் அவரை போல் அமெரிக்கா, லண்டன் சென்று படித்தவன் இல்லை. ஆனால், மக்கள் பிரச்சினைகளை அறிந்தவன், மக்களுக்கு தேவை புள்ளிவிவரங்கள் இல்லை. நல்ல திட்டங்கள்தான்” என்றார்.
அதுவரை அமைதியாக பிரச்சாரத்தில் பேசி வந்த பழனிவேல் தியாகராஜனை, சுந்தர் சி, குஷ்புவின் இந்த பேச்சுகள் கொந்தளிக்க வைத்தது. அதன் விளைவு, இன்று அவர் பிரச்சாரத்தில் சுந்தர் சி-யை ‘‘அவர் 11-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதால் அவருக்கு எதையும் படித்துப் புரிந்துகொள்ளும் அறிவு இல்லை. சினிமா சங்கி ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கும் மதுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றார். மேலும், அவரது மனைவி குஷ்புவை, ‘‘ஜிம்னாஸ்டிக் சாம்பியன் போன்று கடந்த 15-20 ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ், பாஜக என மூன்று கட்சிகள் தாவியவர்” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், “நான் மதுரைகாரன்டா என நெஞ்சை நிமிர்த்தி செல்வேன். ஒரு கை பார்த்துக்கொள்வோம்” என்று மிக காட்டமாகவே சவால் விடுத்துள்ளார்.
தொடர்ந்து கோபம் தனியாமல் சமூக வலைதளப் பக்கத்திலும், “2016, 2019, 2021, 2022, 2024 என எந்த தேர்தலாக இருந்தாலும் நாங்கள் செய்துள்ள பணிகள், மக்கள் எதற்காக வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால், ‘மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை’ என்ற அவதூறுகளை பரப்பி வரும் சில கொள்கையற்றவர்களை், பல கட்சிதாவியவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள, பணம் செலவழித்து பரப்பும் அத்தகையை புரட்டுகளை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது என் அடிப்படை கடமையாகிறது.
இனி மேல் என் தேர்தல் பிரச்சார கூட்டங்கள் அனைத்திலும், ‘சினிமா சங்கி’க்கு மதுரையை பற்றி அறிமுக பாடம் புகட்டப்படும். சாதியவாத கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும்” என்று காட்டமாக குறிப்பிட்டுள்ளார். பழனிவேல் தியாகராஜனின் இந்த கோபமும், சுந்தர் சி, குஷ்பு ஆகியோர் பழனிவேல் தியாகராஜன் மீது முன் வைத்துள்ள விமர்சனங்களும், அரசியல் ரீதியான ஆரோக்கிய கருத்துகளை தாண்டி தனிமனித தாக்குதல்களாக பார்க்கப்படுவதால் மத்திய தொகுதி தேர்தல் களம் சூடாகியுள்ளது.