பழவேற்காடு அருகே தாங்கல்பெரும்புலம் வாக்காளர்கள் நேற்று மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர்.
பொன்னேரி: பொன்னேரி (தனி) தொகுதிக்கு உட்பட்ட பழவேற்காடு அருகே உள்ளது தாங்கல்பெரும்புலம் ஊராட்சி. தாங்கல்பெரும்புலம், எடையன்குளம், கருங்காலி, கோரைக்குப்பம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.
இவர்கள் தேர்தல்களில் வாக்களிப்பதற்கான இரு வாக்கு சாவடிகள், வங்காளவிரிகுடா கடற்கரையையொட்டியுள்ள கோரைக்குப்பம், சத்தான்குப்பம் ஆகிய மீனவ கிராமங்களில் பல ஆண்டுகளாக இருந்து வந்தன.
இதனால், தாங்கல்பெரும்புலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், மீன் படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, பல ஆண்டுகளாக வாக்களித்து வந்தனர்.
இந்நிலையில், சுனாமி காரணமாக சாத்தான்குளம் மீனவ மக்கள், பக்கிங்ஹாம் கால்வாய் அருகே அமைக்கப்பட்ட சுனாமி குடியிருப்புக்கு இடம் மாறினர். இதனால், அப்பகுதியில் ஒரு வாக்கு சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
அதில், சாத்தான்குளம் மீனவ மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதே நேரத்தில், தாங்கல்பெரும்புலம், எடையன்குளம் கிராமங்களை சேர்ந்த வாக்காளர்கள் பட்டியல், கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் இணைக்கப்பட்டது.
இதனால், இவ்விரு கிராம மக்கள் 10 கிமீ தூரம் சுற்றி கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் நிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது.
ஆகவே, சாத்தான்குளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தாங்கல்பெரும்புலம், எடையன்குளம் மக்களுக்காக வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என, தொடர்ந்த கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இந்நிலையில், நீண்ட தூரம் சுற்றி கோரைக்குப்பம் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிப்பதை தவிர்க்கும் விதமாக தாங்கல்பெரும்புலம் கிராம மக்கள் மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வாக்களித்து வருவதும், எடையன்குளம் கிராம மக்கள் சுமார் 7 கிமீ தூரம் டிராக்டர் மூலம் பயணித்து வாக்களித்து வருவதும் தொடர் கதையாக உள்ளது.
தாங்கல்பெரும்புலம் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நேற்று மீன்பிடி படகில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து சென்று, கோரைக்குப்பம் வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.