சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 45 தொகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூர், வீரபாண்டி தொகுதிகளில் 93 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 234 தொகுதிகளிலும் கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் அமைதியாக நடந்தது. 85.10 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் இது உச்சபட்ச சதவீதமாகும்.
இந்த தேர்தலில் 45 தொகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல், 151 தொகுதிகளில் 80 சதவீதத்துக்கு மேல், 37 தொகுதிகளில் 70 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன. 70 சதவீதத்துக்கு கீழ் (68.90 சதவீதம்) வாக்குகள் பதிவான ஒரே தொகுதி பாளையங்கோட்டை மட்டுமே.
தொகுதியைப் பொருத்த வரை, தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 93.41 சதவீதம், வீரபாண்டியில் 93.36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கரூரில் மொத்தம் உள்ள 2.29 லட்சம் வாக்குகளில், 2.14 லட்சமும், வீரபாண்டியில் மொத்தம் உள்ள 2.50 லட்சம் வாக்குகளில் 2.33 லட்சமும் பதிவாகியுள்ளன.
மாவட்ட அளவில் அதிகபட்சமாக கரூரில் 92.65 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.55 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
சென்னை மாவட்டத்தில் 83.71 சதவீத வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக ஆர்.கே.நகரில் 90.56 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 74.84 சதவீத வாக்குகளும் பதிவாகின. முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூரில் 86.12 சதவீதம், விஜய் போட்டியிடும் பெரம்பூரில் 89.74 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
வாக்குகள் பதிவான இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள 62 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும். முன்னிலை நிலவரம் காலை 11 மணிக்கு தெரியவரும்.