மாவட்டத் தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான வி.ஆர். சுபுலட்சுமி, நேற்று (மே 3) அன்று வேலூரில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனத்தில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தைப் பார்வையிட்டார்
சென்னை: தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டது. புதுச்சேரி, கேரளம், அசாமில் கடந்த ஏப்.9-ம் தேதியும், தமிழகத்தில் ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் 85.10 சதவீதம், மேற்கு வங்கத்தில் 92.47 சதவீதம், புதுச்சேரியில் 89.87 சதவீதம், கேரளத்தில் 78.27 சதவீதம், அசாமில் 85.96 சதவீதம் வாக்குகள் பதிவாகின. மேற்கு வங்கத்தில் முறைகேடு புகார் எழுந்ததால் மகரஹட் பஸ்சிம், டைமண்ட் ஹார்பர் ஆகிய 2 தொகுதிகளின் 15 வாக்குச்சாவடிகளில் மட்டும் கடந்த 2-ம் தேதி மறு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. பால்டா தொகுதியில் மே 21-ல் மறு தேர்தல் நடக்க உள்ளது.
இதற்கிடையே, நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வெளிப்படையாக, அமைதியாக நடைபெற, 165 கூடுதல் வாக்கு எண்ணும் பார்வையாளர்கள், 77 காவல் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவின்படி, 5 மாநிலங்களிலும் இன்று மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 1,099 வாக்குச்சாவடிகளில் ஏப்.9-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. 294 பேர் போட்டியிட்டனர். மொத்தம் 9.50 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.
மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
62 மையங்களிலும் 65 கம்பெனி துணை ராணுவப் படையினர், 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர் என 234 பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களுக்கு க்யூஆர் கோடு வசதி மற்றும்புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மையங்களில் குடிநீர், கழிவறை உள்ளி்ட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தடையற்ற மின்சாரம் வழங்க மின்வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
62 மையங்களில் மொத்தம் 234 வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தபால் வாக்குகள், மின்னணு முறையில் அனுப்பப்பட்ட தபால் வாக்குகளை எண்ண 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை வீதம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1,135 கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயந்திரங்களில் வாக்கு எண்ணும் பணிக்கு 3,324 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 10,545 பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுகின்றனர்.
பிரத்யேக க்யூஆர் கோடு உள்ள அடையாள அட்டையின் அடிப்படையில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலரைத் தவிர, வேறு யாரும் வாக்கு எண்ணிக்கை கூடத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வாக்குச்சாவடி அலுவலர்கள், போலீஸார், முதியோர், மாற்றுத் திறனாளிகள் என 8.15 லட்சம் பேர் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. தபால் வாக்குகள் எண்ணி முடித்த பிறகே, இயந்திரங்களில் பதிவான இறுதிச்சுற்று வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
முன்னிலை நிலவரம் காலை 11 மணி முதல் வெளியாகும். தேர்தல் முடிவுகள், முன்னிலை நிலவரங்களை இசிஐநெட் (ECINet) செயலியிலும், results.eci.gov.in என்ற இணையதளத்திலும் மக்கள் தெரிந்துகொள்வதற்கான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
மோதலில் ஈடுபட்டால் கைது டிஜிபி எச்சரிக்கை: வாக்கு எண்ணிக்கையின்போது மோதலில் ஈடுபடுவோரை உடனடியாக கைது செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சென்னையில் 22 ஆயிரம் போலீஸார் உட்பட தமிழகம் முழுவதும் கண்காணிப்பு, ரோந்துப் பணியில் 1 லட்சம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விடுமுறையில் இருந்த போலீஸாரும் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் துணை ராணுவப் படையினரும் கொடி அணிவகுப்பு ஒத்திகைநடத்தி முடித்துள்ளனர்.
சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகும்போது வெற்றி - தோல்வியை மையமாக வைத்து சிலர் மோதலில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக மாநில உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க காவல் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகராறு, மோதல், கலவரத்தில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக செயல்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு அனைத்து மாவட்ட போலீஸாருக்கும் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.