மதுரை: மதுரையைச் சேர்ந்த வேல்முருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் உதவ தகுதியான, விருப்பமான உதவியாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். பிரெய்லி கைக்கடிகாரம், கணித பலகை, எழுத்துக்களின் உருவத்தை பெரிதாக்கி பார்க்க லென்ஸ் ஆகியவற்றை பார்வைத்திறன் குறைபாடுள்ள தேர்வர்கள் தேர்வு மையத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கு.சாமிதுரை வாதிட்டார். டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளவர்கள் தேர்வு எழுத உதவுவதற்கு எழுத்தாளர் ஒதுக்கப்படுகிறார்.
தேர்வு எழுதுவோர் சொந்தமாக எழுத்தாளரை அழைத்து வர அனுமதிப்பது சாத்தியமில்லை. தங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்களைத் அழைத்து வர அனுமதிப்பது, விண்ணப்பதாரர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதிகள் இது தொடர்பாக அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.