விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன்

 
தமிழகம்

திமுக-வுக்கு இந்துக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவர்: விஷ்வ ஹிந்து பரிஷத் காட்டம்

கி.மகாராஜன்

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தீபம் ஏற்ற அனுமதி கொடுக்க மறுத்த திமுக அரசுக்கு வரும் தேர்தலில் இந்துக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில இணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், "தமிழக அரசு தொல்லியல் துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை உச்சியுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரங்கள் இருப்பது தற்போது வெளியாகி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூண் நில அளவை கல் என திமுக எம்பி கனிமொழி கூறியது பொய் எனத் தெரியவந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நபர் உண்மை என்னவென்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவது வேதனையானது.

உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்ட பிறகும் கூட திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்த திமுக அரசுக்கு இந்துக்கள் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள். சிறுபான்மையினர் ஓட்டுக்களை மனதில் வைத்து திமுக அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கில் ஈடுபட்டு வருகிறது. இந்துக்களை அவமதித்து சிறுபான்மையினர் ஓட்டுக்களை அள்ளலாம் என்ற நினைப்பில் திமுக அரசு இவ்வாறு செயல்பட்டு வருகிறது.

திமுகவின் இந்த போலி மதச்சார்பின்மையை இந்துக்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்கள் கூட அறிந்து கொண்டுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என அந்த கிராமத்தைச் சேர்ந்த எல்லா மதத்தினரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வருவதில் இருந்தே தீப தூணில் தீபம் ஏற்ற யாருக்கும் ஆட்சேபனை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே திமுக அரசு தனது ஈகோவை விட்டுவிட்டு மேல் மேல்முறையீடு மனுவை திரும்ப பெற்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற முன்வர வேண்டும். தவறினால் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு திமுக அரசு வருத்தப்பட நேரிடும்”என்று சந்திரசேகரன் கூறினார்.

SCROLL FOR NEXT