தமிழகம்

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 20 பேர் பலி; பலர் படுகாயம்

இ.மணிகண்டன்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் ஒரு கைக்குழந்தை உள்பட 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா விரைந்தார்.

விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ளது வனஜா பட்டாசு ஆலை. இந்த ஆலையில் இன்று ஊழியர்கள் பட்டாசு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், திடீரென்று ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக தகவல்.பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, சம்பவ இடத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உள்பட உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். மீட்புப் பணியில் சாத்தூர், விருதுநகர் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

முதற்கட்ட தகவலின்படி, பட்டாசு தயாரிக்கும் மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக் கிழமையன்று விடுமுறை நாளாக இருந்தும் பட்டாசு தயாரிப்புப் பணி நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இதற்கிடையில், விபத்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவில், “விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலர் உயிரிழந்துள்ள துயரச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்திக் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறவும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரையுமாறு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோரைக் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இதுகுறித்து அறிந்ததுமே மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, தேவைப்படும் அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைக்க அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT