காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்குவாரியை மூடக்கோரி தர்ணாவில் ஈடுபட்ட மாகான்யம் கிராம மக்கள் மற்றும் மாணவர்கள்.
காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மாகான்யம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், வெடிப்பின்போது சிதறும் தூசுகளால் சுமார் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, கிராம மக்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாகான்யம் கிராமத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கல் குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள குடியிருப்புகளில் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்படுவதாகவும், வெடிப்பின்போது காற்றில் பறக்கும் தூசுகள் விவசாய நிலங்களில் படிவதால் சுமார் 250 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிப்பதற்காக வந்த பொதுமக்கள், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரையும் முற்றுகையிட்டனர்.
பின்னர் அறிவுறுத்தலின் பேரில் தர்ணாவில் ஈடுபட்டவர்கள் சார்பில் 4 பிரதிநிதிகள் ஆட்சியரைச் சந்தித்து, கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாய நிலங்களையும் பாதிக்கும் கல் குவாரியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவகளிடம், கல் குவாரியில் வெடி வைக்கப்படும் அளவு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும், வெடி வைப்பதால் வீடுகளிலும் விவசாய நிலங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதியளித்தார்.