தமிழகம்

முதல்வர் ஆகிறார் விஜய்... தமிழகத்தில் அமையும் ‘மைனாரிட்டி’ அரசும், மக்கள் தீர்ப்பும் சொல்வது என்ன?

பாரதி ஆனந்த்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு ஊடே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட தனித்துப் போட்டியிட்ட முதல் தேர்தலில் 105+ இடங்களை வசமாக்கியதே தவெகவுக்கு இமாலய சாதனைதான்.

ஆனாலும் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டுமென்ற நிலையில், அடுத்ததாக தவெக பக்குவமாகக் காய் நகர்த்த வேண்டிய மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது.

ஏற்கெனவே உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் தான் என்று விஜய் சொன்னதால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வெற்றி எம்எல்ஏக்களோடு அங்கே தாவுமா அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து பாமக நழுவுமா என்பதே இப்போதைய பேசுபொருள். அப்படியான கணக்கு வழக்குகள் எல்லாம் ஒர்க் அவுட் ஆன பின்னர், தவெக மைனாரிட்டி அரசாக ஆட்சியில் அமரக் கூடும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகக் கூடும். இதுவரையிலான முடிவுகள் அடிப்படையிலான சாத்தியக் கூறுகள் இவையே.

தவெக ஆட்சிக்கு வந்த கதையை சற்றே துரிதமாக நாம் திரும்பிப் பார்ப்போம். பிப்ரவரி 2, 2024-ல் தான் தவெக தொடங்கப்பட்டது. சரியாக 2 ஆண்டுகள் 3 மாதங்கள் நிறைவு செய்த கட்சிக்கு தமிழக மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இது தவெகவின் எழுச்சியா இல்லை தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் சறுக்கலா என்பது ஆழமான விவாதப் பொருள்.

அதன் அடிப்படையில், தவெகவின் வெற்றிக்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிட்டால், அதில் தமிழகத்துக்கும் திரைக் கவர்ச்சிக்குமான பந்தம் முதலிடம் பெறும். “திரை நட்சத்திர வழிபாட்டில் ஊறிப் போன தமிழகத்தை நன்கு புரிந்து வைத்திருந்தாலேயே திரைவாழ்வில் உச்சத்தில் இருந்த விஜய் கட்சி, அரசியல் என்ற பயணத்துக்கு முதலில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய நம்பிக்கை சோரம் போகவில்லை.” என்கின்றனர் தேர்ந்த அரசியல் நிபுணர்கள்.

அடுத்ததாக அரசியலில் பெரிதும் அனுபவம் இல்லாத விஜய்க்கு தோதாக, தோளாடு தோளாக நிற்க விசிகவில் இருந்து விலகிய எலக்‌ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் ஆதவ் அர்ஜூனா வந்து சேர்ந்தார். அவர் செய்த கிரவுண்ட் ஒர்க், அவர் வகுத்துக் கொடுத்த ஸ்ட்ராடஜிகளையும் விஜய் ஒரு ‘மாணவ ஒழுக்கத்தோடு’ கடைப்பிடித்திருப்பார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

திரைக் கவிர்ச்சி, எலக்‌ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் துணையோடு விஜய்க்கு இன்னும் அதிகமாக பலன் கொடுத்தது அவர் கையிலெடுத்த எதிர்ப்பு அரசியல். தமிழகம் கடந்த 59 ஆண்டுகளாக திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மாறி மாறி திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றிய பூமி. அப்படியிருக்க ஆளும் திமுக எதிர்ப்பு அரசியலை விக்கிரவாண்டி தொடங்கி தனது கடைசி நாள் பிரச்சாரம் வரை ஆக்ரோஷமாக பழகினார் விஜய்.

ஆனாலும் அதிலொரு சூட்சமத்தை தன்வசம் வைத்துக் கொண்டார். அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தாலும் திராவிடக் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. தனது கொள்கைத் தலைவர்களில் பெரியாரையும் சேர்த்தே வைத்திருந்தார். திமுகவுக்கு எதிராக கூரான வாளைச் சுழற்றிக் கொண்டே ‘அதிமுக பலவீனமாகிவிட்டது; அதற்கு தலைமை சரியில்லை’ என்று மீண்டும் மீண்டும் மேடைகளில் சொல்லி அதிமுக வாக்குகளுக்கும் வேட்டு வைத்துக் காட்டியிருக்கிறார்.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக தனது பிரச்சார வாகனத்தில் தனது படத்துக்குப் பின்னணியில் அண்ணாவையும், எம்ஜிஆர் படத்தையும் பொறித்துக் கொண்டார். ஆக பெரியார், எம்ஜிஆர், அண்ணா என யாரையும் விஜய் விட்டுவைக்கவில்லை.

உங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர் பிடிக்கும் ஆனால் அதிமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள், உங்களுக்கு பெரியார், அண்ணா பிடிக்கும் திமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள் என்று விசாலமான கதவைத் திறந்து வைத்தார்.

மூன்றாவதாக தமிழ் தேசியம் என்று சீமான் பேசிக் கொண்டிருக்க திராவிடமும் - தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று நாதக அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் வரவு வைத்துக் கொண்டார்.

கூடவே, ”நான் எந்த மத நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை” என்று கூறி பல்வேறு தரப்பு வாக்குகளையும் தன் பக்கம் மடைமாற்றும் வேலையையும் பக்குவமாக செய்து வந்திருக்கிறார் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அரசிய விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், இன்னொரு தரப்பினர் இதையெல்லாம் திட்டவட்டமாக மறுக்கின்றனர். விஜய்யின் வெற்றி முழுக்க முழுக்க திரை பிம்ப வழிபாட்டின் வெளிப்பாடு என்று அடித்துக் கூறுகின்றனர். விஜய் ஒரு ‘கல்ட் பாலிடிக்ஸை’ உருவாக்கி தமிழகத்தை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்லப் போகிறார் என்று ஆவேச ஆரூடம் கூறுகின்றனர்.

இன்னொரு தரப்பினர், “இது மக்கள் தீர்ப்பு. அதை ஏற்கத் தான் வேண்டும். 5 ஆண்டுகால அரசு சலுகைகளுக்குப் பிறகும். கல்வி வளர்ச்சி, மகளிர் மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்குப் பிறகும், அதே மாதிரியான திட்டங்கள் எங்கள் ஆட்சி அமைந்தால் நிச்சயம் தருவோம் என்று ஏற்கெனவே பலமுறை ஆட்சியில் இருந்த அதிமுக சொல்லியும், இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்கள், வயதானவர்கள், பாரம்பரியமாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் எனப் பலரும் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் மக்கள் ஏதோ ஒரு மாற்றம் வேண்டுமென விரும்பியிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

மாற்றத்தை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசியல் வரலாற்றில் கட்சி ஆரம்பித்த மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அமைத்தோர் பட்டியலில் தவெக தனக்கும் ஓரிடத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், இனி அதன் வாயிலாக மக்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதும், அவ்வாறு நடக்காத போது இடித்துரைப்பதே மாற்றத்தை தேர்ந்தெடுத்த மக்கள் சக்தியின் வேலையாக இருக்க வேண்டும்” எனக் கூறுகின்றனர்.

“இந்தத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடு மக்கள் வாரிசு அரசியலையும், டெல்லியில் இருந்து இயக்கி நடக்ககூடிய ‘ப்ராக்ஸி அரசியலை’-யும் வெறுக்கின்றனர் என்பது உறுதியாகியிருக்கிறது. கூடவே, தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப் பெரிய கரும்புள்ளியாக இருந்த ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்துக்கு பலத்த அடி தவெகவால் வழங்கப்பட்டிருக்கிறது” என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.

இனி தவெக தலைமையிலான ஆட்சி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விஜய் அரசியல்மயமாக்கப் பட்டிருக்கிறாரா, அவரது தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்பட்டிருக்கிறாரா, தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இருக்கிறதா என்பதெல்லாம் விவாதப் பொருளாகவே இருக்க முடியாது.

அதேபோல் இனியும் ஹீரோ ஒர்ஷிப்பை ஊக்குவிக்காமல், மாநில உரிமைகளை சமரசம் செய்துவிடாமல், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, அரசியல் முன்னோர் வகுத்த பாதைகளில் மக்கள் நலன் சார்ந்தவற்றை தழுவிக் கொண்டு விஜய் இருக்கட்டும் என்ற ஆதங்கக் குரல்களும் தமிழக அரசியல் களத்தில் ஒலிக்கின்றன.

SCROLL FOR NEXT