விஜய்
சென்னை: “தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கும் இடையே நடக்கும் போர். அதாவது, விஜய்க்கும், ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்” என தவெக தலைவர் விஜய் பேசினார்.
தவெக தலைவா் விஜய்யின் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் வேலூர் மாவட்டம், அகரம்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அந்தச் சந்திப்புக்குப் பின்னர் தவெக நிர்வாகிகளை உறுதிமொழி ஏற்க வைத்தார் விஜய். அதில், “எங்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. யாரை நம்பியும் ஏமாற மாட்டோம். எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம்” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், “மக்களை நேசிக்கிற ஒரு சரியான தலைமை இல்லாததால், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்தனர். இன்று மக்களை நேசிக்கும் இயக்கமாக தவெக வந்துள்ளது.
மக்களை அவரவர் ஊரில் வந்து பார்க்கவே விருப்பம். ஆனால் நம்மை சுற்றி நடக்கும் பல்வேறு சூழ்ச்சிகளால் மக்களை சந்திக்க முடியவில்லை. நமது ஆட்சி அமைந்ததும், ஒவ்வொரு கிராமத்துக்கும் நேரடியாக வந்து மக்களை சந்திக்கிறேன்.
தற்போது நடக்க இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சம், நிர்வாகத்தை சரியாக செய்யாத உங்கள் ஆட்சிக்கும் நடக்கும் போர். விஜய்க்கும் ஸ்டாலின் சாருக்கும் இடையே நடைபெறும் போர்தான் இந்த தேர்தல். தீய சக்தி திமுக, தூய சக்தி தவெகவுக்கு இடையேயான போர்.
தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும், தமிழ்நாட்டுக்கும் என்.டி.ஏ.க்குவுமான தேர்தல் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். இப்போது நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தலா, பிரதமர் பதவிக்கான தேர்தலா முதல்வர் சார்? எந்த தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என நம் மக்களுக்கு தெளிவாகத் தெரியும். தவெகவுக்கு எதிரி திமுக தான்.
தமிழ்நாடுதான் விஜய்; விஜய்தான் தமிழ்நாடு. விஜய்யும் மக்களும் வேறு வேறு இல்லை, விஜய்யும் மக்களும் உடலும் உயிரும் போல. மக்களை நேசிக்கிற விஜய் வேண்டுமா? மக்கள் விரோத ஆட்சி செய்கிற ஸ்டாலின் சார் வேண்டுமா?
எனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது முதல்வர் ஸ்டாலின்தான். ஒரு செய்தியாளர் சந்திப்பில், ‘எனக்கு யாரும் எதிரி கிடையாது’ என முதல்வர் கூறியிருந்தார். அப்படியென்றால், கரூர் விஷயத்தில் என் மேல் ஏன் பழி சுமத்தினீர்கள்.
உங்கள் உண்மையான நண்பர் லஞ்சம் , ஊழல் தான். அரசியலுக்கு வருவதற்கு முன்பு உங்கள் சொத்து மதிப்பு என்ன? அரசியலுக்கு வந்த பிறகு உங்கள் சொத்து மதிப்பு என்ன? தமிழகத்துக்கு தேவையில்லாத ஆட்சி திமுக.
அறிவாலயம் பக்கம் யாராவது நடந்து போனால் கூட, ஏன் நிழலுக்கு ஒதுங்கினால் கூட கூட்டணிக்கு சேர்த்துக் கொள்கிறார்கள். திமுக கூட்டணிக்கு நான் ‘கல்லாப்பெட்டி கூட்டணி’ என பெயர் வைத்துள்ளேன்.
தமிழகம் சூப்பர் ஸ்டார் மாநிலம்தான்... அது காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர் காலத்தில்தான். இன்றைக்கு சூப்பர் ஸ்டாண்ட்-அப் காமெடிக்காரர் நடத்தும் மாநிலமாக மாறிவிட்டது. தீய சக்திக்கு முடிவு கட்ட இந்தத் தேர்தலை பயன்படுத்துங்கள். விசிலுக்கு ஓட்டு போட்டு தீய சக்திக்கு முடிவு கட்டுங்கள். இது விசில் புரட்சி தேர்தல்.
அனைத்து கட்சிகளும் சேர்ந்து என்னை எதிர்க்கின்றன. அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தவெக, திமுக இடையில் மட்டும்தான் தேர்தலில் போட்டி. சீரியஸாக போட்டி நடக்கும்போது காமெடிக்கு இங்கே இடமில்லை. ஒருசிலர் அவர்களாகவே வந்து வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு கொட்டிக் கிடக்கிறது என்கிறார்களே... கேட்கிறவர்கள் எல்லாரும் கேசரி சாப்பிடுறவர்கள் என நினைத்தீர்களா?
மாதம் ஒரு முறை மின் கட்டணம் கட்டுவது போல ஏற்பாடு செய்வதாக சொன்னீர்களே... செய்தீர்களா? தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு காணாமல் போய்விட்டது. நிறைய கிராமங்களில் பஸ் வசதி இல்லை என்று சொன்னால் ஒட்டுமொத்த திமுக அரசும் கத்திக் கொண்டு வந்து விடுவார்கள். நாங்கள் பஸ் விடாத கிராமங்களே இல்லை என சொல்வார்கள். பல மலை கிராமங்களில் பஸ் வசதி, மருத்துவமனை வசதி இல்லை” என்று அவர் பேசினார்.
விஜய்யின் வாக்குறுதிகள்...
“பெண்கள் பாதுகாப்பில் நமது ஆட்சி நம்பர் ஒன் ஆக இருக்கும். சட்டம் - ஒழுங்கு ஸ்ட்ரிக்டாக இருக்கும். அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் முதல் தரமாக இருக்கும். போட்டி தேர்வுகளுக்கு பல லட்சங்களை கொட்ட தேவையில்லை. போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு தகுந்ததுபோல பாடத் திட்டங்கள் தரமாக தயாரிக்கப்படும்.
உயர்நிலை பள்ளி பாடத் திட்டங்களிலேயே அடிப்படை அரசியல் சாசன சட்டம் சேர்க்கப்படும். அரசு பள்ளிகளில் சுத்தமாக , சுகாதாரமான மற்றும் தரமான கதவுகளுடன் கூடிய ரெஸ்ட் ரும்கள் அமைப்பது உறுதி செய்யபப்டும்.
போதைப் பொருள் இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களில் சரிபாதி பெண்களாக இருக்கும்படி செய்வோம். மலை கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் பிரசவம் பார்க்கும் வசதியுடம் அமைக்கப்படும்.
பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும். ஏற்கெனவே அமைப்பு சாரா தொழிலாளர்கள் அமைப்பு இருந்தாலும் ஆட்டோ டாக்ஸி, லாரிகள் ஓட்டுநர்களுக்கும், அவரது குடும்பங்களுக்கும் தனியாக நலவாரியம் அமைக்கப்படும்.
தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் தேவையான பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கவும், தொழில் வளம் பெருக்கவும் தனி கவனம் செலுத்தப்படும். விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்களின் தேவைகளை கேட்டறிந்து, காலத்துக்கு ஏற்ப திட்டங்கள் உருவாக்கப்படும்” என்று பொதுவான வாக்குறுதிகளைப் பட்டியலிட்டார் விஜய்.
இதனிடையே, “முரட்டு ஜல்லிக்கட்டு காளைதான் தமிழ்நாட்டின் அரசியல்களம். ஜல்லிக்கட்டு காளையை தில்லாக அடக்கும் சிறிய பையன்தான் தவெக” என விஜய் குட்டிக் கதையும் கூறினார்.