போதிய பாதுகாப்பது வசதிகள் இல்லை என்று கூறி சென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரம் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
சென்னை பெரம்பூரில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், பின்னர், பெரம்பூரிலும் கொளத்தூரிலும் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். இதனால் பெரம்பூரில் இருந்து அவர் கொளத்தூர் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு மேல் ஆனது. இதையடுத்து போலீசார் போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து தரவில்லை என அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
மேலும் தவெக மாநில இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதினார். அதில், ‘விஜய் பிரச்சாரத்தின் போது சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். ஆனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தவோ அல்லது வாகனங்கள் தடையின்றி செல்லவோ எவ்வித காவல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. போக்குவரத்து மேலாண்மை முற்றிலும் இல்லாததால், பிரச்சார வாகனங்கள் நகர முடியாமல் பெரம்பூரிலேயே முடங்கின.
முறையான பாதுகாப்பு வழங்காதது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, ஒரு பதிவு செய்யப்பட்ட கட்சியின் ஜனநாயக ரீதியான பிரச்சார உரிமையைப் பறிப்பதாகும்.
தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு, சென்னை மாநகர காவல்துறை மூலம் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூரில் கூட்டம் அதிகமாகக் கூடியதால் வில்லிவாக்கம் தொகுதியில் செய்ய இருந்த பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு நீலாங்கரையில் உள்ள தனது வீட்டுக்கு விஜய் திரும்பினார். இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜய்யின் பிரச்சாரத்துக்கு திரண்ட பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளை சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தவெக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதிதெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.
கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், ‘தேர்தல் ஆணையத்திடம் முறையாக அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், முதல்வர் வருகிறார் என்று கூறி பிரசாரத்திற்கு தடை விதிப்பது கண்டனத்திற்குரியது.
திமுகவின் கைப்பாவையாக அதிகாரிகள் செயல்படுகிறார்கள். ஒருதலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.