“இவரெல்லாம் ஜெயிக்க வாய்ப்பில்லை” என்று வியூகப் புலிகளால் ஒதுக்கப்பட்ட விஜய், தனித்தே நின்று 108 தொகுதிகளை வென்று ஆட்சியையும் தக்கவைத்து விட்டார். ஆனால், அவரால் உருவாக்கப்பட்ட வெற்றி அலையானது தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
விஜய்யோடு எப்போது கைகோக்கலாம் என சமயம் பார்த்துக் கொண்டிருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவுகள் வெளியானதுமே முதல் ஆளாக ஓடிப்போய் தவெக-வுக்கு ஆதரவளித்தது. இதனால், திமுக கூட்டணி மட்டுமல்லாது இண்டியா கூட்டணியே கலகலக்க ஆரம்பித்தது. காங்கிரஸும் திமுக-வும் பரஸ்பரம் கண்டனக் கணைகளை வீசிக் கொண்டன.
இதனையடுத்து, திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள், விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவை நாடியது தவெக. இது தொடர்பாக அந்தக் கட்சிகளுக்குள்ளும் அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறின. இருப்பினும் கொல்லைப்புற வழியாக பாஜக உள்ளே வருவதை தவிர்ப்பதற்காக தவெக ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக அறிவித்த கம்யூனிஸ்ட்கள், திமுக கூட்டணியில் தாங்கள் தொடர்ந்து நீடிப்பதாகவும் அறிவித்தன.
தவெக-வுக்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் விசிக-வுக்குள் இரு மாறுபட்ட கருத்துகள் எழுந்தன. வன்னி அரசு போன்றவர்கள், “தமிழகத்தின் நலன் கருதி முடிவெடுப்போம். இது திருமாவின் காலம்” என்றார்கள்.
சிந்தனைச் செல்வன் போன்றவர்களோ, “திருமாவை முதலமைச்சராக்கும் முடிவை திராவிடக் கட்சிகள் எடுக்க வேண்டும்” என்றதுடன், “மன்னராட்சிக்கு முடிவுகட்டி விட்டதாக தவெக எப்படிச் சொல்லலாம்? வாட்ஸ் அப்பில் ஆதரவு கேட்பதுதான் முறையான அணுகுமுறையா?” எனவும் ஆர்ப்பரித்தார்கள். மாவட்ட நிர்வாகிகளோ, “விஜய்யை ஆதரித்தால் மட்டுமே கட்சிக்கு நல்லது” என கருத்துச் சொன்னார்கள்.
இதற்கு நடுவில், ‘அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு’ என்ற செய்திகள் வெளியாகி, திமுக மற்றும் அதிமுக-வுக்குள் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த முடிவால் தங்களின் எதிர்காலம் என்னாகும் என்பதை பற்றி தீர யோசிக்காமலேயே இருபெரும் திராவிடக் கட்சிகளும் இந்த முடிவை நோக்கி நகர்ந்தன. அதிகாரம் கைக்கு வருவது போல் தோன்றியதால் அதிமுக இந்த விஷயத்தில் அடக்கி வாசித்தாலும் திமுக-வுக்குள் அனல் புயல் அடித்தது.
“மக்களின் தீர்ப்பை மதிப்பது தான் சரி. ஆளுநர் தவெக-வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” என்று சொன்னார் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி. முடிவுகள் தற்போது வேறு திசை நோக்கி நகர ஆரம்பித்து விட்டாலும் ‘அதிமுக ஆட்சியமைக்க ஆதரவு’ என்ற செய்தி குறித்தான விவாதங்கள் திமுக-வுக்குள் இன்னமும் ஓயவில்லை.
இதற்கு மத்தியில் அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தனது கட்சியின் ஒரே எம்எல்ஏ-வை காணவில்லை என புகார் கிளப்பினார். விஜய்க்கு அமமுக எம்எல்ஏ-வான காமராஜ் ஆதரவளித்ததாக பொய்யான ஒரு கடிதத்தின் நகலை ஆளுநரிடம் தந்திருப்பதாக ஆவேசப்பட்ட அவர், இந்த விவகாரத்தை போலீஸ் புகார் வரைக்கும் கொண்டு போனார். இதன் பின்னணியில் குதிரை பேரம் நடந்திருப்பதாக அவர் பழிபோட்ட நிலையில், 12-ம் தேதி பேரவைக்கு வந்த காமராஜ், விஜய்யை வானளாவ புகழ்ந்து, அந்தக் கடிதம் போலியல்ல என தினகரனுக்கே திகில் கொடுத்தார்.
இதையடுத்து, காமராஜை கட்சியிலிருந்து கடாசினார் தினகரன். விஜய்க்கு ஆதரவளித்த விஷயத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் சிலரும் அதிருப்தியில் இருப்பதாகவும் அதனால் அவர்கள் ‘பத்திரமாக’ பாதுகாக்கப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.
கடைசியாக விஜய் புயலானது அதிமுக-வையும் விட்டுவைக்கவில்லை. திமுக ஆதரவில் முதல்வராக நினைத்ததாக பழனிசாமி மீது பகிரங்கமாக பழிபோட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தவெக-வுக்கு ஆதரவளிக்கும் விதமாக எஸ்.பி.வேலுமணி தலைமையில் தனி அணி திரட்டினார். அதன்படியே பழனிசாமி ஒரு பக்கம் எஸ்.பி.வேலுமணி ஒரு பக்கம் என அதிமுக சட்டமன்றக் குழுவுக்கு இரண்டு தலைவர்களை அறிவித்துக் கொண்டார்கள்.
தவெக அரசுக்கு ஆதரவில்லை என அறிவித்தது பழனிசாமி தலைமையிலான அதிமுக. இதனிடையே, சி.வி.சண்முகம் தரப்பிடம் ‘பேசவேண்டியதை’ பேசிமுடித்தது தவெக வியூக வகுப்புக் குழு. அதனால், பழனிசாமியை தவிர்த்துவிட்டு சி.வி.சண்முகம் தரப்பை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் முதல்வர் விஜய். இதனால், ஏற்கெனவே, விஜய்க்கு ஆதரவுக் கரம் நீட்டிய திமுக கூட்டணிக் கட்சிகள் சற்றே ‘ஜெர்க்’ ஆகின. அதிமுகவின் ரெண்டுபட்ட நிலைப்பாட்டால் அதன் கூட்டணிக் கட்சியான பாமக ‘நடுநிலை’ மோடுக்குப் போனது.
இந்த நிலையில், நேற்று பேரவையில் விஜய் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏ-க்கள் 25 பேர் வாக்களித்தனர். அதேபோல் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற மதிமுக எம் எல்ஏ-க்கள் இருவரும் நேற்று பேரவைக்கு வராமல் ஒதுங்கினார்கள். இதற்கு, அவர்கள் இருவரையும் தவெக விலைக்கு வாங்கிவிட்டதாக கடுமையாக எதிர்வினையாற்றினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதேபோல், “அமைச்சர் பதவியும் வாரியத் தலைவர் பதவிகளும் தருவதாக குதிரை பேரம் பேசி அதிமுக எம்எல்ஏ-க்களை இழுத்திருக்கிறார்கள்” என்று பேரவைக்கு வெளியே வெடித்தார் பழனிசாமி.
ஆக, தேறுமா என்று சந்தேகத்துடன் பார்க்கப்பட்ட தவெக அரசு, 144 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று சுலபமாக தேறிவிட்டது. ஆனால், தமிழகத்தின் பிற கட்சிகள் தான் விஜய் புயலால் விடை தெரியாத புதிருக்கு ஆளாகி இருக்கின்றன.