கரூர் சம்பவத்துக்குப் பிறகு பொதுமக்களை சந்திக்காமல் இருக்கும் தவெக விஜய், நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளார்.
தவெக தலைவர் விஜய் கடந்த செப்.27-ம் தேதி கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பிறகு பொது நிகழ்வுகளில் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார். இதனிடையே, கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கே அழைத்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து, கரூர் சோகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்த விஜய், அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவை கூட்டினார். இதையடுத்து மீண்டும் மக்கள் சந்திப்புக்கு அவர் ஆயுத்தமானார். இதற்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் பேரை தேர்வு செய்து ‘மக்கள் பாதுகாப்புப் படை’யை உருவாக்கினார். அவர்களுக்கு ராணுவம் மற்றும் காவல்துறையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை கொண்டு பயிற்சியும் அளித்தார்.
இந்நிலையில், சேலத்தில் இருந்து டிச.4-ம் தேதி முதல் மீண்டும் பிரசாரத்தைத் தொடங்க விஜய் முடிவு செய்தார். ஆனால் திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்புக் காரணங்களால் வேறு ஒரு தேதியில் பிரசாரத்தை வைத்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, நாளை காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளார். இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். காஞ்சிபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்தப்படுவதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தொண்டர் படையினருடன், மக்கள் பாதுகாப்புப் படையினரும் செய்து வருகின்றனர். இதற்காக கல்லூரி வளாக உள் அரங்கத்தில் போதுமான அளவு இருக்கைகளும், தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. காலை 10 மணிக்கு இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.