தமிழகம்

காஞ்சியில் இன்று மக்களை சந்திக்கும் விஜய்: கியூஆர் கோடு நுழைவுச் சீட்டுடன் அனுமதி

செய்திப்பிரிவு

கரூர் சோகத்தைத் தொடர்ந்து பொதுமக்கள், தொண்டர்களை சந்திக்காமல் இருந்த விஜய், அண்மையில் கட்சியின் சிறப்பு பொதுக் குழுவை கூட்டினார். அதனைத் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்கும் விஜய் ஆயத்தமாகி வருகிறார்.

சேலத்தில் இருந்து டிச.4-ல் விஜய் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கோரிகாவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால், கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட சில பாதுகாப்பு காரணங்களை கூறி, வேறு ஒரு தேதியில் பிரச்சாரத்தை வைத்துக்கொள்ள போலீஸார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையில் காஞ்சிபுரத்தில் இன்று விஜய், மக்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நுழைவுச் சீட்டு கொடுக்கப்பட்ட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என தவெக தலைமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 23-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, கியூஆர் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரிக்குள் அடையாள அட்டை இல்லாதவர்கள் நுழைவதை தடுக்கும் வகையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT