முதல்வர் விஜய்
கும்பகோணம்: கும்பகோணத்தை தனி மாவட்டமாக தமிழக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார் என மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தெரிவித்தார்.
கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 2028 மாசி மகாமக விழா தொடர்பாக, அறநிலையத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த விழாவுக்கு 50 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, மகாமக விழாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஏற்பாடுகள், நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் தரப்பில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுவருகிறோம். கும்பகோணத்தை தனி மாவட்டமாக முதல்வர் விஜய் விரைவில் அறிவிக்க உள்ளார். கும்பகோணத்தில் சுற்றுச்சாலை அமைக்கும் பணியில் 3-ம் கட்டப் பணி இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது குறித்து எனது கவனத்துக்கு தற்போது வந்துள்ளது.
அப்பணியை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு, இதுவரை முடியாத திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.