மதுரை: பிரச்சாரத்துக்கு வரும் தவெக தலைவர் விஜய், தொடர்ந்து நேர மேலாண்மையில் மட்டுமில்லாது பிரச்சாரத் திட்டமிடுவதிலும் சொதப்பி வருகிறார். இதனால் அவரது பிரச்சாரம் ரத்தாவதோடு அவரது பேச்சை கேட்க சுட்டெரிக்கும் வெயிலில் சாலைகளில் பல மணி நேரம் காத்திருக்கும் பெண்கள், தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றமடைவதும் தொடர்கிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு, அவரது சுற்றுப் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரால் திட்டமிட்டப்படி, பிரச்சாரம் செய்யும் இடங்களுக்கு செல்ல முடியாமல் பிரச்சாரம் கைவிடப்படுகிறது.
கடந்த 7-ம் தேதி சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் விஜய் பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விஜய் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் ரசிகர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் விஜய் வருவது ரத்து செய்யப்பட்டது.
அதற்கு முன்பு வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் பிரச்சார நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. அவர் நிகழ்ச்சி நடக்கும் இடங்களுக்கு வந்து செல்வதற்கு போதுமான நேரம் இல்லாததால் அவரது இந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று விஜய் காரைக்குடியில் அக்கட்சி வேட்பாளர் மருத்துவர் பிரபுவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதாக இருந்தது. இதற்காக சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்வதற்கு மதியம் 12.மணி முதல் 2.30 மணி வரை காவல் துறை அனுமதித்திருந்தது. ஆனால், மதுரையில் இருந்து காரைக்குடிக்கு 10 மணிக்கு புறப்பட்ட விஜய், காரைக்குடிக்கு மதியம் 2.35 மணிக்கே வந்தடைந்தார்.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குள் காரைக்குடியில் பிரச்சாரம் செய்யும் இடத்துக்கு வராததால், விஜய் பிரச்சாரம் செய்யாமலே கை அசைத்தப்படி திருச்சிக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
விஜய் பேச்சை கேட்கவும், அவரை பார்க்கவும் இன்று காலை முதல் 4 மணி நேரத்துக்கு மேலாக வெயிலில் காத்திருந்த தவெக தொண்டர்கள், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், ‘‘மதுரையில் இருந்து காரைக்குடிக்கு காரில் செல்வதற்கு குறைந்தப்பட்சம் 2 மணி நேரம் வரை ஆகும். ஆனால், விஜய் செல்வதாக இருந்தால் தொண்டர்கள் தொந்தரவு, வழிநெடுக காத்திருக்கும் மக்கள் வரவேற்பு போன்றவற்றை கணக்கீட்டால் 3 மணி நேரத்துக்கு மேலாகும்.
தொண்டர்கள் தொந்தரவு, வரமுடியாத அளவுக்கு கூட்டம் வழிநெடுக வரும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். இந்த நேர மேலாண்மையை கணக்கீட்டு தான் விஜய், காரைக்குடிக்கு முன்னதாகவே வந்திருக்க வேண்டும். அல்லது அவர் முன்தினம் இரவே காரைக்குடி வந்து தங்கியிருக்க வேண்டும். ஆனால், வழக்கம்போலவே தனி வேனில் வந்த அவர், நேரம் ஆக தொடங்கியதும் விரைவாக வந்து பிரச்சாரம் செய்து இருக்கலாம்.
ஆனால், அவர் விரைவாக வருவதற்கு முயற்சி செய்யவில்லை என்பது, அவர் காரைக்குடிக்குள் நுழைந்ததும், கீழே இறங்கி திட்டமிட்டு எடுத்து வந்த சைக்கிளில் ஏறி தொண்டர்களுடன் பயணம் செய்தார். அப்போது பெரும் நெரிசல் ஏற்பட்டு அவர் சைக்கிளில் இருந்து கீழே தடுமாறி விழபார்த்தார். உதவியாளர்கள் அவரை பிடிக்காவிட்டால் கீழே விழுந்திருப்பார்.
பெரும் கூட்டம் திரளும் இடங்களில் தலைவர்கள், பிரச்சாரம் செய்யும் இடத்துக்கு திட்டமிட்ட நேரத்துக்குள் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள். ஆனால், இவரோ தாமதமானதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் சைக்கிளிங் சென்றுள்ளார். இச்சம்பவம் அவர் பிரச்சாரம் செய்ய விருப்பமில்லாததையும், கூட்டத்தை பார்த்து கையசைத்து தனக்கு திரண்டிருந்த கூட்டத்தை சமூகத்துக்கு காட்டவுமே காரைக்குடி வந்திருப்பத போலவே தெரிந்தது.
சரியான திட்டமிடுதல், நேர மேலாண்மையை பிரச்சார சுற்றுப் பயணத்தில் விஜய் கடைபிடிக்காததால் அவரை பார்க்கவும், அவரது பேச்சை கேட்கவும் திரளும் ஆயிரக்கணக்கான பெண்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், மாற்றுத் திறனாளிகள் பல மணி நேரம் சாலைகளில் காத்திருப்பதுதான் தொடர்கிறது. இவர்களை பற்றி விஜய் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
ஆனால் அவருக்கு இயல்பாக திரளும் இந்தக் கூட்டம் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால், பொறுப்புணர்வும், கடமையும் இருந்தால் மட்டுமே விஜய் அரசியலில் சாதிக்க முடியும். அதை அவர் மேற்கொள்ளவிட்டால் ஆந்திராவில் சிரஞ்சிவிக்கு ஏற்பட்ட நிலை கூட ஏற்படலாம்’’ என்றனர் அரசியல் விமர்சகர்கள்.