தமிழகத்தைப் போலவே தனது ஒரே ஒரு பொதுக் கூட்டத்தின் மூலம் புதுச்சேரி அரசியலையும் எக்கச்சக்கமாய் குழப்பி விட்டிருக்கிறார் தவெக தலைவர் விஜய். பேசியது 11 நிமிடம் தான் என்றாலும் பலரின் தூக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறார் விஜய்.
தனது பேச்சில் மத்திய பாஜக அரசை வலிக்காமல் பதம் பார்த்த விஜய், பாஜக-வுடன் கூட்டு வைத்துக் கொண்டு மாநிலத்தை ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கினார்.
அதேசமயம், கூட்டணியில் இருந்து கொண்டு முதல்வர் ரங்கசாமிக்கு குடைச்சல் கொடுத்து வரும் பாஜக அமைச்சர் ஜான்குமாருக்கு வக்காலத்து வாங்கிய விஜய், “ஓர் அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி, மற்றொருவரை நியமித்து 200 நாட்களாகியும் அவருக்கு (ஜான்குமாருக்கு) இன்னும் இலாகா தரவில்லை. இந்த செயல் சிறுபான்மையினரை அவமதிக்கும் செயல் என்று மக்களே கூறுகின்றனர்" என்றார்.
இதைவைத்து சிலர், “பாஜக என்பதைத் தாண்டி ஜான்குமார் கிறித்தவர் என்பதால் விஜய் அவருக்கு வக்காலத்து வாங்கி இருக்கலாம்” என்று விமர்சிக்கிறார்கள். ஜான்குமார் பாஜக-வில் இருந்தாலும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸுடன் நெருக்கமாக இருக்கிறார். கட்சியில் தனித்தும் செயல்படுகிறார். இந்தச் சூழலில் விஜய் அவருக்கு வக்காலத்து வாங்கி இருப்பதன் மூலம் அவரையும் அவருடன் இலவச இணைப்பாக ஜோஸ் சார்லஸையும் தன் பக்கம் இழுக்க முயற்சித்திருப்பதாகத் தெரிகிறது.
இதை மெய்ப்பிக்கும் விதமாக விஜய்யின் பேச்சுக்கு உருக்கமாக நன்றி நவில்ந்த ஜான்குமார், “மாஸ் லீடர் விஜய் தனது பேச்சில், எனக்கு இன்னமும் இலாகா ஒதுக்காததை குறிப்பிட்டிருக்கிறார். இலாகா தருவதுமுதல்வரின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதை ஊருக்கு உரக்கச் சொன்னவிஜய்க்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
இவர் இப்படி அன்பு பாராட்டிய அதேசமயம், பாஜக-வின் பிரதான அமைச்சரான உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நமச்சிவாயமோ, "விஜய் பேசியதில் 90 சதவீதம் உண்மை இல்லை. அவர் பல பொய்க் குற்றச்சாட்டுகளை சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அவருக்கு தவறான தகவல்களைத் தந்துள்ளனர். அப்படித்தான், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லை என்ற தவறான தகவலையும் சொல்லி இருக்கிறார். மொத்தத்தில் விஜய்யின் பேச்சு கண்டிக்கத் தக்கது" என்று கொந்தளித்திருக்கிறார்.
இதை வைத்துப் பார்க்கையில், பாஜக-வில் இருந்து கொண்டே தனி அணியாகத் தயாராகும் ஜான்குமார் தரப்பு வாய்ப்புக் கிடைத்தால் விஜய் பக்கம் சாயும் நிலையில் இருப்பதும், நமச்சிவாயம் போன்றவர்கள் விஜய் எதிர்ப்பில் உறுதியாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. மண்ணின் மைந்தரான புஸ்ஸி ஆனந்தும் இதை பக்காவாக விஜய்க்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்திருக்கிறார். அதனால் தான் அவரும் ஒரு கண்ணில் மட்டும் ‘பட்டர்’ வைத்துப் பேசி இருக்கிறார்.
இதனிடையே, தனது புதுச்சேரி பிரச்சாரத்துக்குப் பிறகு எக்ஸ் தளத்தில், “மாற்றுக் கட்சி நடத்தும் கூட்டமாக இருந்தாலும் பாரபட்சம் காட்டாமல் புதுச்சேரி அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியல் மாண்புடன் புதுச்சேரி அரசு நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்து தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும்” என்று ரங்கசாமி அரசைப் பாராட்டி இருக்கிறார் விஜய்.
விஜய் மற்றும் ரங்கசாமியின் அணுகுமுறைகளை வைத்துப் பார்த்தால் புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - தவெக கூட்டணி அமைவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே தெரிகின்றன. ஆனால் இதுபற்றி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ரங்கசாமியை தனது கூட்டணிக்கு கொண்டு செல்ல விஜய் முயற்சிக்கிறார். தமிழகத்தில் காங்கிரஸை தன் பக்கம் இழுக்க முயற்சிப்பது போலவே, இங்கே ரங்கசாமியை வைத்து திட்டமிடுகிறார். ஆனால், இங்கு அவர் போடும் எந்தக் கணக்கும் எடுபடாது" என்றார்.
பல கட்சிகளை பாஜக கூறுபோட்டுக் கொண்டிருக்கும் போது, புதுச்சேரியில் பாஜக-வையே ஜான்குமார் - நமச்சிவாயம் என இரண்டாக கூறுபோட்டிருக்கிறார் விஜய். இன்னும் நான்கு மாதங்களில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ!