தமிழகம்

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம்” - நெல்லையில் விஜய் பேசியது என்ன?

செய்திப்பிரிவு

“கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள்” என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப் பேரவை தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் விஜய் பேசியதாவது: திமுக கையில் முழு அதிகாரம் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது.

ஏதாவது முட்டுக்கட்டை போட்டு நிகழ்ச்சியை நடத்தவிடாமல் செய்திருப்பார்கள். தற்போது அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். இதனால் இங்கு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்த முடிந்துள்ளது. திமுக அரசு நமக்கு எதிராக பிரச்சினைகள், அவதூறுகள் பரப்பினார்கள்.

          

திமுக, பாஜக கூட்டணி வெளியே தனித்தனியாக இருப்பாங்க. ஆனால், இரண்டு பேரும் ஒன்றுதான். இருவரின் நோக்கமும் ஒன்றுதான். விஜய் வந்துவிடக்கூடாது என்பதுதான் அவர்களது நோக்கமே. நான் வந்ததால் ஊழல் செய்ய முடியாதபடி செய்துவிடுவேன் என்பதால் என்மீது அவர்களுக்கு கடும் ஆத்திரம்.

அவர்கள் அடுத்து ஆட்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை மக்கள் உருவாக்கிவிட்டனர். அவர்களின் கூட்டணி கணக்கு எடுபடவில்லை. அவர்களின் கல்லாப்பெட்டி கூட்டணி கலகலத்துப் போய் நிற்கிறது. அதை ஒட்டவைத்துக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி கட்சியினரே ஒருத்தருக்கு ஒருத்தர் ஓட்டுப் போடமாட்டாங்க போலிருக்கிறது. திமுக-வின் நேரடி கூட்டணிக்கும், மறைமுக கூட்டணிக்கும் நம்மீது கடும் ஆத்திரம்.

அவங்க குடும்பத்திலேயே விசில் சத்தம்பலமாக கேட்கிறதாம். அதனால் இன்னும் ஆத்திரம். சில பல கோடிகளைக் கொடுத்து தனது பையில் காங்கிரஸை ஸ்டாலின் சார் போட்டுக்கொண்டார். ஆனால், உண்மையான காங்கிரஸார் நம்மிடம் உள்ளனர். அவர்களது சிறுபான்மை பாசம் என்ற சாயம் வெளுத்துப் போய்விட்டது.

நான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் போனதுக்குப் பின்னரே கட்சியை ஆரம்பித்துள்ளேன். இது அரசியலை தாண்டிய உறவு. அரசியல் ஆதாயம் தேடுவோருக்கு இது புரியாது. மற்றவர்களுக்கு இது எலெக் ஷன். எனக்கு ஒரு எமோஷன். எனக்கு ஒன்று என்றாலும், மக்களுக்கு ஒன்று என்றாலும் மக்களுக்கும் எனக்கும் கண் கலங்கும். கரூர் விஷயத்தில் என் மீது பழிபோட்டாலும் மக்கள் என் பக்கம் நிற்கிறார்கள். இதனால் ஜனநாயகனை முடக்கினர். அதை யார் முடக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் எடுபடவில்லை.

நான் வெளியே வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டனர். அதுவும் எடுபடவில்லை. பின்னர், நம்மை சுற்றியிருக்கிறவர்களை வைத்து அவதூறு பரப்பினர். அதுவும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. எத்தனை சோதனைகள், வேதனைகளை கடந்து வந்துள்ளேன். திமுக-வினராலேயோ, பாஜக-வினராலேயோ மற்றும் பலராலேயோ என்னை மக்கள் மத்தியில் இருந்து பிரிக்க முடியாது. ஒவ்வொரு வீட்டிலும், விஜய்யும், விஜியும் இருக்கும் வரைக்கும் என்னை மக்கள் மத்தியிலிருந்து பிரிக்க முடியாது.

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு சட்டப் பேரவை தொகுதியிலும் விஜய் தான் நிற்கிறேன். வேட்பாளர் தான் விஜய், விஜய் தான் வேட்பாளர். இத்தனை ஆண்டுகளாக யார் யாருக்கெல்லாம் ஓட்டுப் போட்டீங்க. இந்தமுறை உங்கள் குடும்பத்தில் உள்ளவருக்கு ஓட்டுப் போடுங்க. அந்த வேட்பாளருக்கு ஓட்டுப் போடுவது நமக்கு நாமே ஓட்டுப் போடுவது மாதிரி. அந்த வேட்பாளர் வெற்றிபெற்றால் நீங்கள் வெற்றிபெற்றது போன்றதாகும்.

உங்களுக்காக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், வீரன் சுந்தரலிங்கம், வஉசி, அழகுமுத்துக்கோன், கட்டபொம்மன், குரூஸ் பர்னாந்து போன்ற தலைவர்கள் மாதிரி தவெக உழைக்கும். தவெக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், மீனவர்கள், உழைப்பாளிகள் எல்லோரும் நன்றாக இருப்பார்கள். நமது சந்ததிகள் நன்றாக இருக்கும். எனவே, வேறுயாருக்கும் ஓட்டுப் போட்டு ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள்.

மக்கள் பணத்தில் ஒருபைசா கூட தொடமாட்டேன். தற்போது ஆளுகிறவர்களும், இதற்கு முன் ஆண்டவர்களும் இதைச் சொல்ல முடியுமா? நீங்கள் ஒழுங்கா ஆட்சி நடத்தியிருந்தால் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டிருக்குமா? பெண்களுக்கு பாதுப்புக் கிடைக்காமல் இருந்திருக்குமா? இதற்கெல்லாம் பதில் சொல்ல தகுதி இருக்கிறதா?இரண்டரை வயது குழந்தையை திமுக-வை சேர்ந்தவர் கொலை செய்தார். விளாத்திகுளம் பகுதியில் பிளஸ் டூ மாணவி கொலை செய்யப்பட்டதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?

போலீஸாரை பொம்மையாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். நாங்குநேரி சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை? சட்டவிரோதமாக மணலை, கனிம வளங்களை திருடுகிறார்கள். குடும்பமாக கொள்ளை அடிக்கிறார்கள். ஆட்சி முழுக்க ஊழல் என்று நாறிக்கிடக்கிறது. இந்நிலையில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்பீர்கள்.

உங்கள் பணத்தை வைத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல், மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல். இதை உங்களாலேயோ மற்றும் பலராலேயோ தடுக்க முடியாது. வசதியான வாழ்க்கையை தூக்கி எறிந்துவிட்டு, அத்தனை வலிகளையும் தாங்கி வந்துள்ளேன். தமிழகத்தில் திமுக-வுக்கும் தவெக-வுக்கும் தான் போட்டி. இது விசில் புரட்சி தேர்தலாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொதுக்கூட்டத்துக்குப் பின்னர் தாழையூத்தில் இருந்து வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, சமாதானபுரம் வழியாக கேடிசி நகர் வரையிலும் சுமார் 20 கி.மீ. தூரம் திறந்த வேனில் நின்றபடியே அவர் வாக்குச் சேகரித்தார். வழிநெடுக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரை வரவேற்றனர்.

SCROLL FOR NEXT