கர்நாடக முதல்வர் டிகே சிவகுமார்

 
தமிழகம்

“தமிழக முதல்வர் விஜய் இப்போதைக்கு கர்நாடகாவுக்கு வர வேண்டாம்” - டிகே.சிவகுமார் வேண்டுகோள்

வெற்றி மயிலோன்

சென்னை: “தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் . பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது” என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களை நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக தமிழக முதல்வரின் அலுவலகத்திலிருந்து எங்கள் தலைமைச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இருவரும் சந்திக்கலாம் எனத் திட்டமிட்டோம்.

இருப்பினும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளுக்குப் பிறகு, தற்போதைய சூழல் அதற்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதுகிறேன்.

இரு மாநிலங்களுக்கும் இடையே மிகவும் சுமுகமான சூழல் நிலவ வேண்டியது அவசியம் என்பதால், இந்தச் சந்திப்பை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறேன். இரு மாநிலங்களும் இதனால் பயனடைய வேண்டும் என்பதே என் விருப்பம். நமக்குள் எந்த விதமான கசப்புணர்வும் ஏற்பட நான் விரும்பவில்லை; ஏனெனில், தண்ணீர் தொடர்பான விவகாரத்தில் இரு மாநிலங்களும் பயனடையும் வகையிலேயே தீர்வு அமைய வேண்டும்.

இவை அனைத்தும் மழை பொழிவதைப் பொறுத்தே அமைகிறது. உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தெளிவான வழிகாட்டுதலையும், தீர்ப்பையும் வழங்கியுள்ளது. மேகேதாட்டு அணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது எங்களை விடத் தமிழகத்திற்கே அதிகப் பலனளிக்கக்கூடியது. மின் உற்பத்தியைத் தவிர மற்ற அனைத்து வகையிலும் அது தமிழகத்திற்கு அதிக நன்மையை அளிப்பதாகவே உள்ளது.

முன்னரே எடுக்கப்பட்ட முடிவின்படி, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எந்தவொரு உத்தரவையும் மீற நாங்கள் விரும்பவில்லை. அதேவேளையில், எங்கள் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இது குறித்த தகவல்களைத் தெரிவிப்பது எனது கடமையாகும்.

அவர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் உதவியையும் அளித்து வருகின்றனர். அரசியல் நோக்கங்கள் மற்றும் கருத்துகளில் எங்களுக்குள் வேறுபாடுகள் இருக்கலாம்; ஆனால், மாநிலத்தின் நலன் கருதி அவர்கள் எங்களுக்கு உதவுகிறார்கள். நாங்கள் அவர்களை நம்பிக்கைக்குரியவர்களாகக் கருதிச் செயல்படுவோம். நாளை மறுநாள் அவர்களைச் சந்திக்கவுள்ளோம்.

இதற்கிடையில், இரு மாநிலங்களின் நலன் கருதி அமைதியான மற்றும் சுமுகமான சூழலில் சந்திப்பை மேற்கொள்ளும் வகையில், தமிழக முதல்வரிடம் இந்தச் சந்திப்பைச் சிறிது காலம் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் . பதற்றமான சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது. தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது. " என்றார்.

முன்னதாக, மேகே​தாட்டு அணை​ குறித்த கர்நாடக அரசின் விரி​வான‌ திட்ட அறிக்​கையை மத்​திய நீர்வள ஆணை​யம் திருப்பி அனுப்​பியது. மேலும், காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT