தமிழகம்

தேர்தல் தேதி அறிவிக்கட்டும்... சுதந்திரமாக சூறாவளி பிரச்சாரத்துக்குத் தயாராகும் விஜய்

துரை விஜயராஜ்

“வீட்டுக்குள் இருக்கும் அரசியல்வாதி” என்ற பிம்பத்தை உடைக்க, ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற முழக்கத்துடன் களமிறங்கினார் விஜய். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கிய இவரது அரசியல் பிரச்சாரப் பயணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆளும் திமுக அரசின் செயல்பாடுகளைத் கடுமையாக விமர்சித்த விஜய், மாற்றத்துக்கான அவசியத்தை முன்வைத்து மக்கள் மத்தியில் நேரடியாக உரையாடினார்.

          

இந்த நிலையில் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. இந்தத் துயரச் சம்பவத்தை முன்னிறுத்தி தமிழக அரசு கொண்டு வந்த கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் (எஸ்ஓபி) விஜய்யின் பிரச்சாரத்துக்குப் பெரும் முட்டுக்கட்டையாக மாறியது.

திறந்தவெளி வாகனப் பிரச்சாரத்துக்குத் தடை, நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் சந்திப்புக்குக் கடும் கட்டுப்பாடுகள், இவை எல்லாம் விஜய்யின் ‘நேரடி மக்கள் தொடர்பு’ பாணிக்கு அரசு போடும் முட்டுக்கட்டை என தவெக தரப்பில் கொதித்தெழுந்தனர்.

கட்டுப்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று சில தளர்வுகளைப் பெற்றாலும், ஒரு மாவட்டத்தில் வெறும் 5 ஆயிரம் நிர்வாகிகள் மட்டுமே சந்திக்கும் நிகழ்வாக விஜய்யின் பிரச்சாரக் கூட்டங்கள் சுருக்கப்பட்டன.

இதுகுறித்து தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி ஒன்றில், “கடந்த ஓராண்டாக விஜய்யின் எழுச்சியை முடக்குவதையே திமுக அரசு முழுநேர வேலையாகக் கொண்டுள்ளது. ஒருபுறம் எஸ்ஓபி மூலம் தடுத்துவிட்டு, மறுபுறம் 'விஜய் வெளியே வரவில்லை' எனப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு நிலைமை தலைகீழாகும்.

காவல்துறை தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வரும்போது, முதல்வரின் உத்தரவுகளோ, ஒருதலைப்பட்சமான தடைகளோ செல்லுபடியாகாது. அப்போது விஜய்க்காக அனைத்து சாலைகளும் திறக்கப்படும். தடையை உடைத்து அவர் சூறாவளிப் பிரச்சாரத்தை முன்னெடுப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, சுதந்திரமாக விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளியாகச் சுழலும் போது, அது தமிழக அரசியலில் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என தவெக-வினர் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

SCROLL FOR NEXT