ஓசூர்: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்கவில்லை என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார். இதுதொடர்பாக ஓசூரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
முதல்வர் விஜய் பெற்ற வெற்றி தியாகத்துக்கோ, உழைப்புக்கோ கிடைத்ததல்ல. குறிப்பிட்ட சதவீத மக்கள் மாற்றத்தை விரும்பி அவருக்கு வாக்களித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
விஜய் அலுவலகத்தில் இருந்து எந்தச் சூழ்நிலையிலும் பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை. எந்தக் கட்சியும் தீர்ந்து போகாது. தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட அதிமுக தனித்துவத்தை எப்படி இழக்கும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிக்காத விஜய், பெரும்பான்மை இல்லை என்றால் யாரை சந்தித்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் இடைத்தேர்தல் வரட்டும், அப்போது எப்படி இருக்கும் என பாருங்கள். தவெகவுக்கு கட்சி அமைப்பே இல்லை. சினிமா பாணியில் பேசுவதால் முன்னால் உள்ளவர்கள் கைதட்டலாம். முகம் சுளிப்பவர்கள் எத்தனை பேர் என்பதை உணர வேண்டும். உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிப்பேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப்பெண் அதிரடிப்படை அமைக்கப்படும் என்றார். சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு எத்தனை அலுவலகங்கள் திறக்கப்பட்டன. அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்ற எந்த விவரமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.