தமிழகம்

திருச்சி: அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஸ், தவெக தலைவர் விஜய்யின் வேட்புமனுக்கள் ஏற்பு

எம்.கே.விஜயகோபால்

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனு ஏற்கப்பட்டது. அதேபோல, திருச்சியை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் இரண்டு இடங்களில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வயது, வழக்குகள் குறிப்பிட்டதில் வித்தியாசம் இருப்பதாகவும், இதனால் அவரது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

          

அதையடுத்து வித்தியாசம் இருப்பதாக கூறப்பட்ட பெரம்பூர் தொகுதியில் விஜய் சார்பாக வயது, வழக்கு தொடர்பாக 2-வது பிழை திருத்த பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. திருச்சி கிழக்கு தொகுதியை பொறுத்தவரை சொத்து விவரத்தில் ரூ.6 கோடி மதிப்புள்ள அவரது பிரச்சார வாகனம் விடுபட்டது தொடர்பாக கூடுதல் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சி 2-வது மண்டலக்குழு அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி உதவி ஆணையாளருமான முத்து முருகேச பாண்டி தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று காலை நடைபெற்றது. 2 தொகுதிகளில் மாறுபட்ட விவரங்களை தெரிவித்துள்ள விஜய்யின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது என்று திமுக வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தவெக தரப்பில் சென்னையில் இருந்து வந்திருந்த வழக்கறிஞர் மகாராஜன் தலைமையிலான குழுவினர் கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது குறித்து விளக்கிக் கூறினர். அதையடுத்து விஜய்யின் வேட்புமனுவை ஏற்றுக்கொள்வதாக கிழக்கு தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்து முருகேச பாண்டி அறிவி்த்தார். இதன்மூலம் தமிழகத்தில் 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ், அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், நாதக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 26 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 2 சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கே.என்.நேரு, அன்பில் மகேஸ் மனுக்கள் ஏற்பு: திருச்சி மேற்கு தொகுதியில் திமுக அமைச்சர் கே.என்.நேரு, திருவெறும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதேபோல, திருச்சி மாவட்டத்தில் திமுக சார்பில் ஸ்ரீரங்கம் துரைராஜ், மணப்பாறை அப்துல் சமது, லால்குடி பாரிவள்ளல், மண்ணச்சநல்லூர் கதிரவன், முசிறி கருணைராஜா, துறையூர் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

திருச்சி மாவட்டத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிழக்கு தொகுதி ராஜசேகரன், மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் ராஜசேகரன், ஸ்ரீரங்கம் மனோகரன், திருவெறும்பூர் குமார், மணப்பாறை விஜயகுமார், லால்குடி லீமாரோஸ், மண்ணச்சநல்லூர் பரதன், முசிறி யோகநாதன், துறையூர் சரோஜா ஆகியோரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.

மேலும், நாதக, தவெக கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் 4 முனை போட்டி ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT