‘‘மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? என்று திமுகவுக்கு விஜய் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஏற்கெனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் பேருக்கு கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதி அட்டையும் வழங்கப்பட்டிருந்தது. அந்தவகையில், அனுமதி அட்டையுடன் வருகை தந்தவர்கள் மட்டும் நிகழ்ச்சி அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கரூர் சம்பவத்துக்கு பிறகு நடைபெறும் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்பதால், தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகே ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் திரண்டிருந்தனர். தவெகவில் தன்னார்வலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொண்டர் படையினர் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்டத்தை வழிநடத்தினர். குறைந்த அளவிலான போலீஸாரே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், கட்சி சார்பில் கடும் கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
காலை 11 மணி அளவில் விஜய் அரங்குக்கு வந்தார். அப்போது, அவர் பேசியதாவது: காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம். தன்னுடைய வழிகாட்டி என்பதாலேயே, தான் ஆரம்பித்த கட்சியின் கொடியில் அண்ணாவை வைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், அண்ணா ஆரம்பித்த கட்சியை, அதன்பிறகு கைப்பற்றியவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று, நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியவேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவர்களுக்கும் (திமுகவுக்கும்) எந்த பிரச்சினையும் கிடையாது.
அவர்கள் வேண்டுமானால், நம்மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால், நாம் அப்படி இருக்கபோவதில்லை. உங்களை, என்னை, நம் எல்லாரையும் பொய் சொல்லி, நம்ப வைத்து, ஏமாற்றி,ஆட்சிக்கு வந்து நல்லது செய்வதுபோல் அவர்கள் நடித்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்கமுடியும்.
கொள்கை என்றால், அது கிலோ எவ்வளவு? என்ன விலை என கேட்கும் அளவுக்கு ஒரு கட்சியை நடத்திக் கொண்டு இருக்கும், தமிழக முதல்வர், நமக்கு கொள்கை இல்லை என்கிறார். கொள்கையை வெறும் பேச்சில் மட்டும் பேசிக் கொண்டு, எல்லா கொள்கையையுமே அதளபாதாளத்தில் புதைத்துவிட்டு, ஏதோ கொள்கைளை அவர்கள் தான் குத்தகைக்கு எடுத்தது போல பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் கொள்கையே கொள்ளை தான். ‘பாப்பா...பவள விழா பாப்பா...நீ பாசாங்கு காட்டாதே பாப்பா... நீ நல்லவர் போல் நடிப்பதை பார்த்து நாடே...’,(கையால் வாயை மூடிக்கொண்டார்). பாப்பா என்பதை மிகவும் ஆசையாய், பாசமாய், மென்மையாக தான் கூறினேன்.
அதை நீங்கள் அதிர்ச்சியாக எடுத்துக் கொண்டாலும், விமர்சனமாய் நினைத்தாலும் நான் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் நாங்கள் விமர்சனம் செய்யவே தொடங்கவில்லை. அதற்குள் அலறினால் எப்படி? காஞ்சிபுரம் மண்ணை வாழ வைக்கிற ஜீவநதியான பாலாற்றை பெரியார், அண்ணா பெயரை, சும்மா பெயருக்கு வைத்து கொண்டு ஆட்சி நடத்துகிறவர்கள் சுரண்டிவிட்டார்கள். கொள்ளையடித்து விட்டார்கள்.
அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி 22 லட்சத்து 70 ஆயிரம் யூனிட் மணலை கொள்ளை அடித்திருக்கிறார்கள். அந்தவகையில் ரூ.4,730 கோடி கொள்ளை அடித்திருக்கிறார்கள். மேலிருந்து கீழ் வரை, ஒரு கட்சியே சிண்டிகேட் போட்டு கொள்ளை அடிப்பதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
அரசியல் எதிரி, கொள்கை எதிரி யார் என தெளிவாக சொல்லிவிட்டு தான் களத்துக்கு வந்திருக்கிறோம். அதில் எந்தவித குழப்பமும், ஊசலாட்டமும் இருக்கபோவது கிடையாது. இந்த விஜய், ‘சும்மா எதையும் சொல்லமாட்டான், சொல்லிட்டா அதை செய்யாம விடமாட்டான்’.
அதென்ன தற்குறி... தவெகவுக்கு ஆதரவு கொடுக்கிற கோடிக்கணக்கான மக்கள், நண்பா, நண்பிகள், ஜென்-ஸி கிட்ஸ் எல்லோரையும் தற்குறிகள் என சொல்லிவிட்டு, இப்போது அப்படி சொல்ல வேண்டாம் என்கிறார்கள். சமீபத்தில் அவர்கள் நடத்திய அறிவுத்திருவிழா... மன்னிக்கவும், அவதூறு திருவிழாவில், பேசிய அந்த கட்சியை சேர்ந்த எம்எல்ஏ, தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்த ஆதரவுக் குரல் இனி எல்லா வீட்டிலும் எதிரொலிக்கும்.
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோது அந்தக் கட்சியை கூத்தாடி கட்சி என்றார்கள். பின்னர், அவரை விமர்சித்தவர்கள் எல்லோரும், அதே கட்சியில் போய் சேர்ந்தார்கள். இப்போதும் நம்மை அப்படி தான் சொல்கிறார்கள். மர்மயோகி என்ற படத்தில், ‘குறிவைத்தால் தவறமாட்டேன். தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்’, என எம்.ஜி.ஆர். வசனம் பேசியிருப்பார். இது புரிய வேண்டியவர்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.
ஏன் இந்த விஜய்யை தொட்டோம், ஏன் இந்த விஜய்யுடன் இருக்கும் மக்களை தொட்டோம் என நினைத்து வருத்தப்பட போகிறீர்கள். மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? மக்களிடம் இருந்து ஓட்டு வாங்க போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், அதே மக்களிடம் இருந்து தானே இத்தனை நாட்களாக நீங்கள் ஓட்டு வாங்கி கொண்டிருந்தீர்கள். அப்படியென்றால் நீங்கள் யார்? மக்களுக்கு நீங்கள் காட்டும் நன்றியும், மரியாதையும் இதுதானா?
இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான், வாழ்நாள் முழுவதும், விடையே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உங்களது அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் கிடையாது. இவர்கள் தமிழக அரசியலின் ஆச்சரியக் குறி. மாற்றத்துக்கான அறிகுறி. லாஜிக்கே இல்லாமல், தற்குறி, தற்குறி என சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இங்கே தவெகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி. ‘மை டியர் அங்கிள்’, (ஸ்டாலினை இப்படி குறிப்பிட்டார்) இதை ஏற்கெனவே மக்கள் முடிவு செய்து விட்டார்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
எல்லோருக்கும் வீடு, இருசக்கர வாகனம்: மக்களால், அமைக்கப்பட இருக்கும் நம் ஆட்சியில், நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் நிச்சயம் சொல்லுவோம். அதற்கு முன்பு அதைப்பற்றி கொஞ்சம் சொல்கிறேன். எல்லோருக்கும் நிரந்தரமான வீடு. வீட்டுக்கு ஒரு இருசக்கர வாகனம். கார் என்பது லட்சியம். அதற்கான வசதி வாய்ப்புகளை உருவாக்கும் அளவுக்கு பொருளாதார வளர்ச்சிக்கு வழியை உண்டாக்குவோம். வீட்டுக்கு ஒருவர் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும். அதற்கான வேலை வாய்ப்பை உருவாக்குவோம். அதற்கேற்ற வகையில், கல்வியில், பாடத்திட்டத்தில் சீர்த்திருத்தம் செய்வோம்.
தரமான அரசு மருத்துவமனைகள், பருவ மழை காலத்தில் ஊரும், மக்களும், விவசாயமும் பாதிக்கப்படாமல் இருக்க திட்டத்தை உருவாக்குவோம். மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கருத்து கேட்டு அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவோம். முக்கியமாக தொழிற்துறை வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம். எல்லாவற்றையும் விட முக்கியம். சட்டம் ஒழுங்கை மிகவும் கட்டுப்பாட்டில் வைத்திருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், அருண்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.