புதுச்சேரி நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன்

 
தமிழகம்

“விஜய் ஒரு சின்ன குழந்தை; அவர் பேசுவதை பொருட்படுத்தக்கூடாது” - ஜெகத்ரட்சகன்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: ‘விஜய் ஒரு சின்னக் குழந்தை, அவருக்கு சட்டம் தெரியவில்லை, அவர் சினிமாவில் பேசுவதுபோல் பேசுகிறார், அவர் பேசுவதை பொருட்படுத்தக்கூடாது’ என திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நான்காம் கட்ட திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளில் 17 தொகுதிகளில் திமுக உறுப்பினர் சேர்க்கை மூன்று கட்டங்களாக தொடங்கப்பட்டது.

நான்காம் கட்டமாக இன்று மண்ணடிப்பட்டு தொகுதியில் உள்ள திருக்கனூர் கடைவீதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டது.

மாநில அமைப்பாளர் இரா. சிவா முன்னிலையில் நடைபெற்ற முகாமில், தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி., கலந்து கொண்டு, வீடு, வீடாக சென்று திமுக உறுப்பினர் படிவம் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து ஜெகத்ரட்சகன் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழகத்தை போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தை தந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் இதர தொகுதிகளிலும் பணிகளை நிறைவேற்றுவோம்” என்றார்.

திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “வடநாடு, தென்நாடு என பிரிக்கிறார்கள். வெள்ளையனை வெளியேற்ற பாடுபட்டோம். தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறோம். புதுச்சேரியை ஆள அருகதை இங்குள்ளோருக்கு இல்லை. டெல்லியில் இருந்துதான ஆட்சி செய்கிறார்கள்.

புதுச்சேரியில் என்ன அதிகாரமுள்ளது. முதல்வர், எம்எல்ஏக்களுக்கு அதிகாரமில்லை. அப்படிப்பட்ட ஜனநாயகமே தேவையில்லை. மாநில சுயாட்சி- மத்தியில் கூட்டாட்சியே எங்கள் தத்துவம். மக்கள் உணர்வு எங்களுக்குதான் தெரியும். வடநாட்டில் இருந்தோரை ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளோர்தான் ஆள வேண்டும் என்பதை திமுக முன்வைக்கிறது” என்றார்.

திமுகவுக்கு கொள்கை கிடையாது - கொள்ளையடிக்கதான் தெரியும் என விஜய் பேசியிருக்கிறாரே என்ற கேள்விக்கு, "பாவம் விஜய் ஒரு சின்ன குழந்தை. அவர் சொல்வதை பொருட்டாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சினிமாவில் பேசுவதுபோல் பேசுகிறார்" என தெரிவித்தார்.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு அதற்காக எதுவும் செய்யவில்லை என விஜய் சொல்கிறாரே என்ற கேள்விக்கு, "விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. இந்த விவகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது. நீதிமன்றம் சென்றுள்ளோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வது திமுகவுக்கு உயிர்மூச்சான கொள்கை. அதில் இருந்து ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT