சென்னை: டெல்லியில் இருந்து நேற்று சென்னை திரும்பிய தவெக தலைவர் விஜய், கட்சியின் உயர்மட்ட நிர்வாகிளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார்.
தேஜ கூட்டணியில் தவெக இணையப்போவதாக எழும் யூகங்களுக்கு மத்தியில் விஜய் விரைவில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிஉள்ளன.
சமீபத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் நடத்திய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகே கூட்டணி குறித்த பரபரப்பு தொற்றிக்கொண்டது. கூட்டணி குறித்த தகவல்கள் கசிந்தது தொடர்பாக, ஆனந்தை விஜய் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பின்னணியில் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா இடையிலான அதிகாரப் போட்டி நிலவுவதே காரணம் என தெரிகிறது.
இதற்கிடையில், அமித்ஷா தரப்பிலிருந்து கூட்டணி அழைப்பு வந்தாலும், அதை தவிர்க்கவே 90 இடங்கள், இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி என்ற நிபந்தனையை விஜய் விதித்ததாக கூறப்படுகிறது.
சமீபத்திய சிபிஐ விசாரணையின் போது அரசியல் அழுத்தம் இன்றி, கரூர் விவகாரம் குறித்து மட்டும் விசாரணை நடந்ததால் விஜய் உற்சாகமாக திரும்பிஉள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ஆதவ் அர்ஜுனா அலுவலகத்தில் நடந்த ஆலோசனையில் பங்கேற்ற விஜய், நிர்வாகிகளுக்கு இடையே நிலவும் மோதலைச் சமாதானம் செய்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தேர்தல் வியூகம் மற்றும் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுவதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல் குமார் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ‘பாஜக -அதிமுக, ராமதாஸ், சசிகலா ஆகியோரை தவெகவுடன் தொடர்புபடுத்தி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானதாகும்.
குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்த விதமான பேச்சுவார்த்தை எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை.
பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம். பொதுமக்களிடமும் தொண்டர்களிடமும் குழப்பத்தை விளைவிப்பதற்காக இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.