தமிழகம்

முதல்வர் விஜய்யை சந்தித்த தேவரகொண்டா - ராஷ்மிகா தம்பதி

டெக்ஸ்டர்

சென்னை: நட்சத்திர தம்பதிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும், தமிழக முதல்வர் விஜய்யை சென்னையில் நேரில் சந்தித்தனர். 

முதல்வருடனான இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள விஜய் தேவரகொண்டா, “அன்பிற்குரிய தளபதி விஜய் சாருடன் மிகவும் அழகான பொழுதை செலவிட்டோம். நாள் முழுவதும் கடுமையான பணிச்சுமை இருந்தபோதிலும், அவர் எங்களை மிகுந்த அன்போடு வரவேற்றார். வாழ்க்கை, பணி மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்த தனது தனிப்பட்ட பார்வைகளைப் பகிர்ந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஒரே ஒரு சந்திப்பிலேயே விஜய் சார் எனக்கு மிகவும் பிடித்தமானவராக மாறிவிட்டார். அடுத்த சந்திப்பு வரை எனது அன்பும் மரியாதையும்” எனத் தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

அதே போல ராஷ்மிகாவும் தனது இன்ஸ்டா பக்கத்தில், “மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் நினைவுக்கு எட்டிய நாள் முதல் அவரது தீவிர ரசிகையாக இருந்தது முதல், அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றது வரை, தற்போது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவியில் அவரை மேலும் வியந்து பார்க்கிறேன். அவரது பயணம் நம்ப முடியாத அளவிற்கு அற்புதமானது. உங்களுக்கு எப்போதும் எனது அன்பும் வாழ்த்துகளும் சார்” என்று பதிவிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே 2023-ல் வெளியான 'வாரிசு' படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

SCROLL FOR NEXT