சென்னை: ‘சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதற்காகவும், கூட்டணி தயவில் அமைந்துள்ள தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தவெக தலைமையிலான முதல்வர் விஜய் மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துள்ளார். சட்டத்தை மதித்து செயல்படாமல் மன்னிப்பு கேட்பது நீதிமன்றத்தை ஏமாற்றும் செயல். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்’ என இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 2026 நவம்பர் 24 கார்த்திகை தீபத்தன்று தீபத் தூணில் தீபம் ஏற்றப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு நிச்சயம் தீபத்தூணில் தீபம் ஏற்றி விடுவார்கள் என பக்தர்கள் ஆவலோடு காத்திருந்த சமயத்தில் வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயிலில் உள்ள இறந்தவர்களுக்கு ஏற்றும் மோட்ச தீபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
நவம்பர் 24-ம் தேதிக்கு முந்தைய நாள் திருப்பரங்குன்றம் மலைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் வீட்டுக்காவலில் கைது செய்யப்பட்டனர். இன்னும் பலரை வழியில் கைது செய்து மண்டபத்தில் வைத்தனர். இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதற்கு தான் என்பது தெளிவாக தெரிந்தது.
தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தீபம் ஏற்றாமல் இருக்க என்னென்ன தந்திரங்களை செய்ய முடியுமோ, அத்தனை கீழ்த்தரமான தந்திரங்களையும் அரங்கேற்றின. தற்போது மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் உச்ச நீதிமன்றத்தில் ஏன் தீபம் ஏற்றப்படவில்லை என 17 பக்கம் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற தேவஸ்தானத்தால் குழு நியமிக்கப்படவில்லை என்றும் அதனால் தீபம் ஏற்ற முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேவஸ்தானத்தின் ஒப்புதலை பெற முயன்றதாகவும் அவர்கள் அதனை ஏற்காமல், அவர்கள் தான் உச்சிப்பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றியதாகவும் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைவிட அறங்காவலர் குழுவின் கருத்தொன்றும் பெரிதல்ல என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அறியாதவர் போல் நடிக்கிறார் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் திருப்பரங்குன்றம் கோயில் பட்டர்களின் கருத்துப்படியே உச்சிப் பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டது என்று கோயில் இணை ஆணையாளர் செல்வி தெரிவித்துள்ளார். ஆனால் கோயில்களின் பட்டர்களோ எங்களிடம் கருத்தொன்றும் கேட்கவில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பட்டர்களின் கருத்தை திரும்பப் பெறவும், மறுப்பு அறிக்கை வெளியிடவும் சுவாமிநாதன் பட்டர் வீட்டில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக தங்களின் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பட்டர்களை காவல் துறையை குவித்து, அரசு அதிகாரிகள் மிரட்டியது வெளியே தெரிய வந்திருக்கிறது.
தெளிவான வழிகாட்டுதலோடு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தும் கூட, அறங்காவலர் குழு தீபத்தூணில் தீபம் ஏற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதில் ஏற்கெனவே இருந்த அறங்காவலர் குழு அவசரமாக கலைக்கப்பட்டு, தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டு புதிய குழுவை நியமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களே இந்த சட்டவிரோதச் செயலுக்கு உடந்தையாக இருந்துள்ளார்கள்.
இப்படியாக அறங்காவலர் குழு பட்டர்களின் அறிக்கை என கடைந்தெடுத்த பொய்களை கூறி அரசியல்வாதிகளின் ஆலோசனையின் பேரில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமரியாதை செய்து இருக்கிறார் மாவட்ட கலெக்டர். தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்த உடனேயே தமிழக அரசு வழக்கறிஞர்களுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் தீவிர ஆலோசனை செய்து மறுசீராய்வுக்கு தயாரானது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு.
மறு சீராய்வு மனு அனுப்பப்பட்ட போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறப்போகிறோம் என்பதைத் தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தியது தவெக அரசு. உச்ச நீதிமன்றம் தெளிவாக இந்த வழக்கை நடத்தி இடைக்கால உத்தரவை பிறப்பித்த பிறகு மேல் சீராய்வு மனுவை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் உச்ச நீதிமன்றத்திற்கு இல்லை.
எனவே நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்றியே தீர வேண்டும் எனும் பட்சத்தில் சென்ற ஆண்டு திமுக அரசாங்கம் செய்த சதி வேலைகளை விட இந்த ஆண்டு த.வெ.க அரசு பல சதி செயல்களை செய்து பல நாடகங்களை அரங்கேற்றி ஒட்டுமொத்த இந்துக்களின், முருக பக்தர்களின் கோபத்திற்கு ஆளாகி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் தீபம் ஏற்றாததற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மன்னிப்பு கேட்பது என்பது ஏற்கனவே எழுதி வைத்த திரைக்கதையின் ஒரு பகுதி என்பதை தமிழகமே அறியும். சட்டத்தை அறியாதோர் கூட சட்டத்தை அவமதிப்பதை சட்டம் அனுமதிப்பதில்லை. சட்டத்தை அறிந்து நடக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை நமது நாட்டின் சட்டம் வலியுறுத்துகிறது.
அப்படி இருக்க சட்டத்தின் மாட்சியமையை நிலைநிறுத்த உறுதியேற்ற மதுரை மாவட்ட கலெக்டர், தமிழக முதல்வர் ஆகியோர் தெரிந்தே சட்டத்தை அவமதித்து சட்டத்தின் மாண்பிற்கு களங்கத்தை ஏற்படும் விதமாக பல பொய்யான காரணங்களை நீதிமன்றத்தில் பிராமண பத்திரமாக தாக்கல் செய்தது மன்னிக்க முடியாத தண்டனைக்குரிய குற்றமாகும்.
சிறுபான்மையினரை திருப்திபடுத்துவதற்காகவும், நாத்திக நக்சல் எண்ணம் கொண்டவர்களின் கருத்திற்காகவும், கூட்டணி தயவில் அமைந்துள்ள தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தவெக தலைமையிலான முதல்வர் விஜய் மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துள்ளார்.
நவம்பர் 24-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நிச்சயம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துவிட்டு, தற்போது பலவிதமான காரணங்களை அடுக்குவது ஏற்புடையதல்ல. பெரும்பான்மை இந்துக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக முதல்வர் விஜய் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு இந்துக்களின் மத உணர்வுகளை அவமதித்து, நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். எனவே முதல்வர் விஜய்யின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஜோசப் விஜய்யின் அதிகாரத்திற்குப் பணிந்து, மதுரை மாவட்ட கலெக்டர், உச்ச நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தந்துள்ளார். இது சட்டத்தின் மாட்சிமையை அவமதிக்கும் செயல். எனவே மாவட்ட ஆட்சியர் தவறான செயலுக்கு தக்க தண்டனையை உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.