பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்

 
தமிழகம்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் தவெக பொறுப்பாளர்கள் நியமனம்

வெற்றி மயிலோன்

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக சார்பிலான தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வெளியிட்ட அறிக்கையில், ‘வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ளத் தேர்தல் பணிக்குழுவும், பணிகளைக் கண்காணிக்க தேர்தல் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்படுகிறார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுராந்தகம் தேர்தல் பணிக்குழு:

மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் பி.ராஜ்குமார், தென்னரசு, வினோத் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

துணைப் பொறுப்பாளர்களாக சோழிங்கநல்லூர் எம்எல்ஏ சரவணமூர்த்தி, செங்கல்பட்டு எம்எல்ஏ தியாகராஜன், திருப்போரூர் எம்எல்ஏ விஜயராஜ், பல்லாவரம் எம்எல்ஏ காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாலாஜி (எ) மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

தாராபுரம் தேர்தல் பணிக்குழு:

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ், இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் விஜய் பாலாஜி, விஜயலட்சுமி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

துணைப் பொறுப்பாளர்களாக திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலமுருகன், திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா, பல்லடம் எம்எல்ஏ ராம்குமார், நாமக்கல் எம்எல்ஏ திலீப், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள்.

அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெற்றிச் சின்னமாம் விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும். இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT