தவெக தலைவர் விஜய்
பிரச்சார அனுமதி பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தவெக-வில் தேர்தல் பிரச்சார சட்டப்பாதுகாப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரங்களை ஒருங்கிணைக்கவும் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யவும் பல்வேறு முக்கிய குழுக்களை தவெக நியமித்துள்ளது. அந்தவகையில், தற்போது தேர்தல் பிரச்சாரத்தின் போது காவல்துறையிடம் அனுமதி பெறுவது மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை கொண்டு, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார மாநில பாதுகாப்பு குழு ஒன்றை விஜய் நியமித்துள்ளார்.
அந்தக் குழுவில், கட்சியின் இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பொருளாளர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், சட்ட ஆலோசனைப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் குமரேசன், இணை ஒருங்கிணைப்பாளர்கள் சிவசண்முகம், பாண்டியன், வழக்கறிஞர் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்கள் இந்திரா தன்ராஜ், சக்கரவர்த்தி, தேசிய செய்தி தொடர்பாளர் சத்யகுமார் உள்ளிட்ட 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவினர், கட்சியின் தேர்தல் களப்பணிகள் எந்தவித சட்டச் சிக்கல்களும் இன்றி சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் ஒரு முக்கியமான அரணாகச் செயல்படும். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணித்தல், பிரச்சார அனுமதிகளை பெறுதல், பொய் வழக்குகள் மற்றும் சட்ட நெருக்கடிகளைத் தடுத்தல், வேட்பு மனுத் தாக்கல் மற்றும் சரிபார்த்தல், மாவட்ட அளவிலான வழக்கறிஞர் அணிகளை ஒருங்கிணைத்தல், சமூக ஊடகக் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கின்றனர்.