தமிழகம்

தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் குழு அறிவித்தார் விஜய்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நலன் மற்றும் மாநில வளர்ச்சிக் கொள்கைகளை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணிகளை தவெக அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதற்காக 12 பேர் அடங்கிய உயர்மட்டச் சிறப்புக் குழுவை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக மக்களின் முன்னேற்றத்தையும், மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு தவெக தேர்தல் அறிக்கை அமையவுள்ளது. இதற்காக சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது. இக்குழு, தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், சிறு மற்றும் குறு தொழில் அமைப்புகள், கல்வியாளர்கள், செவிலியர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், தொழிலாளர் சங்கங்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கருத்துகளை நேரடியாகக் கேட்டறிய திட்டமிட்டுள்ளது.

அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

தேர்தல் அறிக்கை குழுவில், தவெக கொள்கை பரப்புச் பொதுச்செயலாளர் அருண்ராஜ், துணை பொதுச்செயலாளர் ராஜ்மோகன், முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், தேசிய செய்தி தொடர்பாளர்கள் எம்.கே.தேன்மொழி பிரசன்னா, வழக்கறிஞர் சத்யகுமார் மற்றும் நிர்வாகிகள் டி.எஸ்.கே.மயூரி, சம்பத்குமார், அருள் பிரகாசம், பரணிபாலாஜி, முகமது பர்வேஸ், மருத்துவர் டி.கே.பிரபு, கிறிஸ்டி பிருத்வி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT