சென்னை: ஜெம் வீரமணி வழக்கில் தொடர்புடைய சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெம் வீரமணி வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோவை வெளியிட்ட ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த துளிர் அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதில், சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் கடந்த 2025-ம் ஆண்டு கிடைத்த ஒரு பென்-டிரைவ் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சில ஊடகங்கள் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வீடியோ காட்சிகளை வெளியிடுவதால் அந்த சிறுமிகள் மட்டுமின்றி மற்ற சிறுமிகளின் தனிப்பட்ட அந்தரங்க உரிமை மற்றும் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சிலர் தொலைக்காட்சிகளில் விவாதம் என்ற பெயரில் அப்பட்டமாக தனிமனித உரிமைகளை மீறிவருகின்றனர். எனவே சிறுமிகளை அடையாளப்படுத்துவோர் மீது சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அத்துடன் சிறுமிகள் தொடர்பான வீடியோக்களை வெளியிடவும் அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும், எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான்சத்யன், “இந்த விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோக்கள் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களை முடக்கக்கோரி கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறுமிகளின் வீடியோக்கள் வெளியானது தொடர்பாக விசாரணை நடக்கிறது” என்றார்.
அதையடுத்து நீதிபதி, “இந்த விவகாரத்தின் தீவிரம் தெரியாமல் சமூக ஊடகங்களும், ஊடகங்களும் செயல்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட யாரும் தைரியமாக புகார் அளி்க்க முன்வரமாட்டார்கள். மும்பை தாக்குதல் சம்பவத்தின்போது காவல்துறையின் நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் தீவிரவாதிகள் தங்களது அணுகுமுறையை மாற்றி செயல்பட்டனர். பத்திரிகை சுதந்திரம் என்பது ஊடக விசாரணை என்ற பெயரில் விவாதம் செய்வதற்கான உரிமை அல்ல” என்றார்.
பின்னர் நீதிபதி, வழக்கில் தொடர்புடைய சிறுமிகளின் வீடியோக்களை எக்காரணம் கொண்டும் வெளியிடக்கூடாது என ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தார். வழக்கின் முன்னேற்றம் குறித்து வாரம் ஒருமுறை காவல்துறை பத்திரிகை செய்தி
குறிப்பை வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள், வீடியோக் களை வெளியிட்ட ஊடக நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.30-க்கு தள்ளி வைத்தார்.
சிபிஐ விசாரணை கோரி முறையீடு
ஜெம் வீரமணி தொடர்புடைய வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகி யோர் அடங்கிய அமர்வில் நேற்று காலை முறையீடு செய்தார்.
அப்போது அவர், ‘‘இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமிகளின் வீடியோக்கள் திட்டமிட்டு கசியவிடப்பட்டுள்ளன. குற்றவாளிகள் மீது காலதாமதமாக போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். வழக்கையே முடித்து வைக்கக்கோரி போலீஸார் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். குற்றத்தை மறைக்க கோடிக்கணக்கில் பணம் கைமாறியுள்ளது. இன்னும் பல உண்மைகள் வெளியே வரவில்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ராஜசேகர் தரப்பில் மனு தாக்கல் செய்துள்ளோம். எனவே இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழக போலீஸாரே புலன் விசாரணையை தொடரட்டும். இதுதொடர்பான மனு விசாரணைக்கு ஏற்கப்படும் என்றனர். இந்நிலையில், ஜெம் வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி வாராகி என்பவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்ற காவல் அக்.9 வரை நீட்டிப்பு: ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவருடைய நீதிமன்ற காவலை வரும் அக்.9 வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பத்மா உத்தரவிட்டுள்ளார். இதற்காக வீரமணி காணொலி காட்சி மூலமாக சிறையில் இருந்தவாறு நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.