மாணிக்கம் தாகூர் | கோப்புப் படம்
சென்னை: ‘இடைத்தேர்தல் வெற்றி மூலம் முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தலை பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் முதல்வர் விஜய்’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் மக்களின் பேராதரவோடு அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கடந்த 4 மாதங்களாக முதல்வர் ஜோசப் விஜய்யின் ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்றிதழாக இதை கருத வேண்டும்.
த.வெ.க. ஆட்சிக்கு எதிராக தி.மு.க., அ.தி.மு.க. கட்டவிழ்த்துவிட்ட அவதூறு பிரச்சாரங்களை மக்கள் புறக்கணித்து த.வெ.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது முதல்வர் தலைமையிலான அரசுக்கு மக்கள் மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இந்த இரண்டு தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவை தமிழக மக்களின் பிரதிபலிப்பாக கருத வேண்டும்.
தமிழ்நாட்டில் 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு இடைத்தேர்தலுக்கு பணம் கொடுக்காத தேர்தலாக மாற்றி, இடைத்தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கிற முதல்வர் ஜோசப் விஜய்யை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.