நாமக்கல்: சேந்தமங்கலம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சந்திரசேகர், வெற்றி விருந்து விழா என்ற பெயரில் நேற்று கிடா வெட்டி 2 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்த பிறகு செயல்படுத்தும் திட்டங்களின் பெயர்களில் வெற்றி என்ற வார்த்தை இணைத்து அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பேருந்துகளில் பெண்களுக்கு வெற்றிப் பயணம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேந்தமங்கலம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் பொ.சந்திரசேகர், வெற்றி விருந்து விழா என்ற பெயரில் தொகுதி மக்களுக்கு கிடா வெட்டி விருந்து வைத்தார்.
நாமக்கல் அருகே ரெட்டிப்பட்டியில் நடந்த இந்த விருந்து விழாவில் பத்திர பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், நாமக்கல், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏக்கள் திலீப், லட்சுமணன் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள், தொகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனர்.
விருந்தில் 250 கிலோ ஆட்டு இறைச்சி, 200 கிலோ கோழி இறைச்சி, 2000 முட்டைகளுடன் விருந்து பரிமாறப்பட்டது. வெள்ளை சாதம், இறைச்சி குழம்பு, வறுவல், ரசம், பாயசம், ஐஸ்கிரீம் பரிமாறப்பட்டது. இதுகுறித்து எம்எல்ஏ சந்திரசேகர் கூறும்போது, “வேண்டுதலுக்காக கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள பெரியசாமி கோயிலில் 25 கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது” என்றார்.